ஆந்திர மேல் சபையைக் கலைக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். அரசு பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிப்பது மாநிலத்தின் அதிகாரத்தை பரவலாக்குவது எனப் பல திட்டங்களை அவர் முன்வைத்து வருகிறார். இந்நிலையில் ஆந்திர மாநிலத்திற்கு என்று மூன்று தலைநகரங்களை அமைக்க ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு முடிவு செய்தது. ஆனால் இந்தத் திட்டத்திற்கு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
ஆனாலும் அதையும் மீறி விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகரமாகவும், அமராவதியை சட்டமன்றத் தலைநகரமாகவும், கர்நூலை நீதித்துறையின் தலைநகரமாகவும் ஆந்திர அரசு அறிவித்தது. ஆந்திர மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் உருவாக்கப்படுவதற்கான மசோதா அந்த மாநில சட்டமன்றத்தின் கீழவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மேலவையில் நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஆந்திராவின் சட்டமன்ற மேலவையை முழுமையாக நீக்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அரசு முயற்சித்து வருவதாக கூறப்பட்டது.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மேலவை தேவையா? இல்லையா? என ஜெகன்மோகன் பேசி இருந்தார். மேலும் “மேல் சபைக்காக மட்டும் ஒரு வருடத்திற்கு 600 கோடி செலவாகிறது. இதனால் மக்களுக்கான திட்டங்கள் தடைபடுகின்றன. ஏற்கெனவே நிதி பற்றாக்குறையால் தவிக்கும் மாநிலத்தில் இந்த மேல் சபை தேவையா?” என்றார். மேலும் இதுதொடர்பாக விவாதம் செய்ய 27-ஆம் தேதி சிறப்பு சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று சட்டசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது மூன்று மாநிலங்கள் அமைக்கும் திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக உள்ள மேலவையைக் கலைக்க சபாநாயகர் பரிந்துரைத்தார். அதனை ஏற்று இப்போது ஆந்திர மாநில அமைச்சரவை, மேலவையை கலைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவான குதிவாடா அமரந்த், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இன்று அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.