ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடைபள்ளியைச் சேர்ந்தவர் சுகாசினி. இவருக்கு கீர்த்தனா, ஜெர்சி என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், சுகாசினிக்கு குடிவாடாவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் உடன் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக சுரேஷ், நேற்று அதிகாலை சுகாசினியையும் அவரது 2 மகள்களையும் காரில் ஏற்றிக் கொண்டு ராஜ மகேந்திரவரம் நோக்கிச் சென்றுள்ளார். அப்போது வழியில் உள்ள கோதாவரி ஆற்றுப் பாலத்தில் செல்பி எடுக்கலாம் என தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சுகாசினி, தனது 2 மகள்களுடன் ஆற்றுப் பாலத்தின் ஓரத்தில் நின்றார். அப்போது திடீரென சுரேஷ், சுகாசினி மற்றும் அவரது 2 மகள்களையும் ஆற்றில் தள்ளினார்.
இதில் மூத்த மகள் கீர்த்தனா ஆற்றுப்பாலத்தில் இருந்த பிளாஸ்டிக் குழாயைப் பிடித்துத் தொங்கியுள்ளார். சுகாசினியும் அவரது இளைய மகள் ஜெர்சியும் ஆற்றுத் தண்ணீரில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து சுரேஷ் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளார். எனினும் கீர்த்தனா சுதாரிப்பாக, மற்றொரு கையால், தன்னிடம் இருந்த செல்போன் மூலம் 100 எண்ணிற்கு போன் செய்து தகவல் கொடுத்தார். ராவுல பாலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தொங்கிக்கொண்டு இருந்த லட்சுமி கீர்த்தனாவை பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து ரவுலபாலம் போலீசார், “நேற்று அதிகாலை 3.50 மணியளவில், எங்களுக்கு உதவி கோரி ஓர் அழைப்பு வந்தது. அதன்பேரில், நாங்கள் அதிகாலை 4 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். நாங்கள் பார்த்தபோது, அந்த சிறுமி ஆபத்தான சூழ்நிலையில் பாலத்தின் இணைப்பில் இருந்த பிளாஸ்டிக் பைப்பில் தொங்கிக் கொண்டிருந்தார். பின்னர் அவரை பத்திரமாக மீட்டோம்" என்று தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சிறுமி கீர்த்தனா, "என் அம்மாவுடன் வசிக்கும் சுரேஷ், எங்களை ராஜமகேந்திரவரம் நோக்கி காரில் அழைத்துச் சென்றார். வழியில் ரவுலபாலம் பாலத்தில், செல்பி எடுப்பதாக கூறி, காரை நிறுத்தி, எங்கள் மூவரையும் கோதாவரி ஆற்றில் தள்ளிவிட்டார்" என போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் சுகாசினி மற்றும் அவரது குழந்தை ஜெர்சி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். கீர்த்தனா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுரேஷை கைதுசெய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.