மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாரதிய ஜனதா எம்.பி. அனந்த் குமார் ஹெக்டே மீது பிரதமர் மோடி கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவின் உத்திர கன்னடா தொகுதி எம்.பி.யான அனந்த் குமார் ஹெக்டே, பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதாவது ஒட்டுமொத்த சுதந்திர போராட்டமும் ஆங்கிலேயர்களின் ஆதரவு மற்றும் ஒப்புதலுடனேயே நடந்தது என்றார். மேலும் அது நேர்மையான போராட்டமே இல்லை என்றும் சுதந்திரம் பெற நடைபெற்ற ஒரு ஒப்புக்கான போராட்டம் மட்டுமே எனவும் தெரிவித்தார். காந்தியின் உண்ணாவிரதப் போராட்டம், சத்யாகிரகம் ஆகியவையும் ஒரு நாடகம்தான் என்று பேசினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.
இது குறித்த தங்களின் நிலைபாடு பற்றி பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஹெக்டே மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியது.
இந்நிலையில், ஹெக்டேவின் கருத்தால் பிரதமர் மோடி கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு அவருக்கு கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் கர்நாடகா மாநில பாரதிய ஜனதா தலைவர் நளின் குமார் காட்டீல் தெரிவித்துள்ளார்.