”அந்த 3 லட்சம் கோடியை மத்தியஅரசு கொடுத்தாலே போதும்”-பொருளாதார வல்லுனர் ஆனந்த் ஸ்ரீநிவாசன்

”அந்த 3 லட்சம் கோடியை மத்தியஅரசு கொடுத்தாலே போதும்”-பொருளாதார வல்லுனர் ஆனந்த் ஸ்ரீநிவாசன்
”அந்த 3 லட்சம் கோடியை மத்தியஅரசு கொடுத்தாலே போதும்”-பொருளாதார வல்லுனர் ஆனந்த் ஸ்ரீநிவாசன்
Published on

கொரோனா ..... இன்று உலக நாடுகள் முதல் உள்ளூர் வரை என அனைத்தையும் தனது கடிவாளத்தால் கட்டிப்போட்டிருக்கிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியா பெரிதாக பாதிக்க வில்லையே என ஓரமாக இதயத்தை தடவிக்கொடுத்தாலும், நம் கண் முன்னே அடுத்ததாக இருக்கும் மிகப்பெரிய சவால் பொருளாதாரம்.

கொரோனா பாதி உயிர்களை வாங்கினால் பசி மீதி உயிரை வாங்கிவிடும் என்று பலரும் வேதனை தெரிகின்றனர். ஆம் அப்படித்தான் இருக்கிறது நிலைமை. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொழிற்சாலைகளும் தொழிலாளர்களும் பொருளாதாரத்தை மீட்க தங்களது முழுப்பங்களிப்பை அளித்தாலும், இந்திய பொருளாதாரம் அதற்கான சரியான கூலியை தருமா என்பது குதிரை கொம்பாகத்தான் இருக்கிறது.

அதனால் இந்த விஷயத்தில் யாரை குறை சொல்வது என்பதைக் கடந்து இந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது என்பதே இந்தக்காலக்கட்டத்தில் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. ஆகவே வரும் காலத்தில் தொழிற்துறைகளும், தொழிலாளர்களும் எப்படி இயங்கினால் பாதிப்பின் வீரியத்தைக் குறைத்துக் கொள்ளலாம் என்பது குறித்த விளக்கங்களை அறிந்துகொள்ள பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசனை தொடர்பு கொண்டு பேசினோம். நமது கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் கீழ் கண்டவாறு...

முதலில் இக்கட்டான சூழ்நிலையை நாம் எப்படி அணுக வேண்டும்?

இதில் அணுகுவதற்கு ஒன்றுமே இல்லை. இன்று பிஸ்னஸ் ஸ்டாண்டர்டு செய்திதாள் ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறது. அதில் மத்திய அரசு மாநில அரசுக்கும், தொழிற்சாலைகளுக்கும் 3,00,000 கோடி ரூபாயை தரவேண்டி இருப்பதாக கூறியிருக்கிறது. அந்தத் தொகையை மத்திய அரசு வழங்கினாலே போதும் முக்கால் வாசி பிரச்னையை சமாளித்து விடலாம்.

வேலை இழப்பு, சம்பள குறைப்பு - தொழிற்சாலைகளுக்கு அரசு என்ன செய்ய வேண்டும்?

CMI- வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கடந்த பிப்ரவரி மாதத்தில் மக்கள் தொகையில் 30 சதவீதத்தினர் வேலை இழந்துள்ளதாகவும், மார்ச் மாதத்தில் 8 கோடி நபர்கள் வேலை இழந்துள்ளதாகவும், ஏப்ரல் மாதத்தில் 12.2 கோடி நபர்கள் வேலை இழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதில் சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பாதி சம்பளம், கால் சம்பளம் என வழங்கி வருகிறது. இந்த நிலை கண்டிப்பாக மோசமான விளைவை தரும் ஆகவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசின் உதவி நிச்சயமாக தொழிற்சாலைகளுக்கு தேவை.

அரசு இதே பிரச்னையை எதிர்கொண்டிருக்கிற மற்ற நாடுகளை பார்க்க வேண்டும். சில நாடுகளில் தொழிலாளர்களின் சம்பளத்தில் 80 சதவீதத்தை அரசே தருவதற்கு முன் வந்திருக்கிறது. மீதி 20 சதவீதத்தை நிறுவனங்களின் கையில் ஒப்படைத்துள்ளது. கனடா நாட்டில் 50 சதவீதத்தை அரசும் 25 சதவீதத்தை நிறுவனமும், நிறுவனத்திற்கு சொந்தக் கட்டுமானம் இருந்தால் மீதம் 25 சதவீதத்தை நிறுவனமே தானாக முன் வந்து விட்டு கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வந்திருக்கிறது. இதனை தவிர ஒவ்வொரு நாடும் பொருளாதரத்தை மீட்டெடுக்க நிறுவனங்களுக்கு பல சலுகைகளை வழங்கியிருக்கிறது.

ஆனால் இங்கு அப்படியா இருக்கிறது. நேற்று முன் தினம் வந்த ஆங்கில இந்து நாளிதழில் அரசின் வருமான வரி தொகை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது எதை காட்டுகிறது? இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட அரசு எப்படி தனது வசூல் வேட்டையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என்பதைதான் காட்டுகிறது. ஆகவே மாநில அரசு மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய 12,000 கோடியை சண்டையிட்டு வாங்க வேண்டும். ஆனால் அதற்கு கூட தமிழக அரசுக்கு தைரியமில்லை.

தமிழ்நாட்டில் கடந்த வருடம் ஜெயலலிதா ஆட்சி நடந்து கொண்டிருந்த போது, மத்திய அரசின் இணக்கமான 846 தொழிலளதிபர்களுக்கு 1,50,000 கோடி ரூபாய் வரிவிலக்கு அளித்தார். மேலும் 68,500 கோடி ரூபாய் கடன் தொகையை தள்ளுபடி செய்தார். இதனால் யாருக்கு லாபம் அடித்தட்டு மக்களுக்கா? இல்லை தொழிலதிபர்களுக்கா?. ஆக இந்த ஒட்டு மொத்த அரசாங்கமும் தொழிலதிபர்களுக்குதான் சாதகமாகதான் வேலை செய்கிறது. இப்படி ஏதாவது ஒரு நடவடிக்கை சாமனிய மக்களுக்காக எடுக்கப்பட்டிருக்கிறதா? சொல்லுங்கள் பார்ப்போம்.

அப்படியானால் இந்த நெருக்கடியான சூழ்நிலையை ஒரு சாமானியன் எப்படிதான் எதிர்கொள்வது?

ஒன்றும் செய்ய முடியாது. பொறுமையாகதான் இருக்க வேண்டும். தொழிற்சாலைகள் தளர்வுகளுடன் இயங்கினாலும் இயல்பு நிலை திரும்ப எப்படியும் அக்டோபர், நவம்பர் மாதம் ஆகிவிடும். அது வரை பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசாங்கத்தால் ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிற்கும் குறிப்பிட்ட தொகையை வழங்க முடியும். ஆனால் அரசோ சீனாவிலிருந்து இந்தியாவிற்கு எப்படி தொழிற்சாலைகளை கொண்டுவரலாம் என யோசிக்கிறது. இங்கு உள்ள நிறுவனங்களே இழுத்து மூடிக் கொண்டு, விழிப்பிதுங்கி நிற்கும் போது அரசோ தேவையில்லாத நடவடிக்கைகளில் தனது கவனத்தைச் செலுத்திக்கொண்டிருக்கிறது.

ஏன் பாஜகவை சேர்ந்த சுப்ரமணியனே மோடிக்கு பொருளாதாரம் குறித்து தெரியவில்லை என்றும் அதை அவருக்கு சொல்லித்தருவதற்கும் அவர் அருகில் யாரும் இல்லை என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இந்தக் இக்கட்டான சூழ்நிலையிலும் கூட மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளதே?

இது அரசுக்குத்தான் ஆபத்து. ஆம் அரசு மது பான கடைகளை திறக்கும். குடிமகன்கள் அனைவரும் வரிந்துக்கட்டிக்கொண்டு செல்வார்கள். இதனால் அரசுக்கு மிக குறுகிய காலத்தில் தேவையான நிதியானாது கிடைத்து விடும்.

ஆனால் நமது ஊரில் மருத்துவமனைகள் இலவசமாக இயங்குகிறது என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். குடியால் ஏற்படும் உடல்சார்ந்த விளைவுகளை குணப்படுத்த குடிமகன்கள் மருத்துவமனைகளைதான் நாடுவார்கள். அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் அரசு செலவழிக்கும் செலவானது, மதுவால் கிடைக்கும் வருவாயை விட மிக மிக அதிகம். ஆனால் 5 வருடத்திற்கு ஒரு முறை வரும் ஆட்சி மாற்றம் இதையும் தண்ணீரில் எழுதிய எழுத்துகள் போல ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது.

இதிலிருந்து ஒரு சாமானியன் என்ன பாடத்தைக்கற்றுக்கொள்ள வேண்டும்?

முதலில் ஓட்டை பார்த்து போட வேண்டும். எப்போதுமே ஒரே தலைவரால் அனைத்து பிரச்னைகளையும் சமாளிக்க இயலாது. ஆகவே ஆட்சியானது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளின் கீழ் இயங்கவேண்டும். அப்போதுதான் இது போன்ற இக்கட்டனா சூழ்நிலைகளில் திறமையான தலைவர் ஒருவர் இல்லாவிட்டாலும் இன்னொரு தலைவர் ஆட்சியை சரியான திசையில் கொண்டு செல்ல நேரிடும்.

கேரளாவை பாருங்கள் கடந்த இரண்டு நாட்களாக அங்கு நடத்தப்பட்ட சோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. காரணம் அங்கு ஒவ்வொருவரும் தங்களின் உரிமைக்காக போராடுகீறார்கள். அவர்களை பின்பற்றியாவது நாம் கரை சேர வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com