மஹிந்திரா நிறுவனத்தின் நிறுவனரும் இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவருமான ஆனந்த் மஹிந்திரா எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். புதுமையான கண்டுபிடிப்புகளை பகிர்ந்து அதனை பாராட்டுவதோடு, அந்த கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக இருந்தவர்களை அங்கீகரிக்கவும் ஆனந்த் மஹிந்திரா தவறியதில்லை.
அதன்படி அண்மையில் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று நெட்டிசன்களை பெரிதளவில் கவர்ந்திருக்கிறது. அந்த வீடியோ எட்டு லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டும் வியப்படையவும் செய்திருக்கிறது.
மொபைலிட்டி என்ற சொல்லாடல் தற்போது மிகவும் பிரசித்தமாகியிருக்கிறது. மொபைல் ஏ.டி.எம்., மொபைல் டோல், மொபைல் நீதிமன்றம், மொபைல் டாய்லெட், மொபைல் பேங்க் என பலவும் புழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் Marriage Hall on Wheels என்ற புதுமையான கண்டுபிடிப்புதான் ஆனந்த் மஹிந்திராவை பெரிதளவில் பாராட்டச் செய்திருக்கிறது.
அதில், பெரிய ட்ரக் வாகனம் ஒன்றை 200 பேர் பங்கேற்கும் வகையில் திருமண மண்டபம் போன்று மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. 40க்கு 30 என்ற சதுர அடி அளவில் இந்த மொபைல் திருமண மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில், திருமண மேடை, விருந்தாளிகள் உட்காரும் பகுதி என ஏ.சி. உள்ளிட்ட சகல வசதியுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, “இந்த புதுமையான கண்டுபிடிப்புக்கு மூளையாக இருந்தவரை சந்திக்க ஆவலாக இருக்கிறேன். மிகவும் அற்புதமான சிந்தனைமிக்க படைப்பாக இருக்கிறது. எங்கு வேண்டுமானாலும் இந்த மொபைல் திருமண மண்டபத்தை கொண்டுச் செல்லலாம் என்பதை காட்டிலும் பொருளாதார ரீதியாக பெரியளவில் மக்களுக்கு உதவிக்கரமாக இருக்கும்” என கேப்ஷன் இட்டிருக்கிறார்.
இதனைக் கண்ட நெட்டிசன்கள், “மொபைல் கல்யாணம் மண்டபம் என்பதை உருவாக்கி மொபைலிட்டியை வேற லெவலுக்கு கொண்டுச் சென்றிருக்கிறார்கள். சாதாரணமாக திருமண மண்டபங்களை பராமரிப்பதற்கு ஆகும் செலவு இதன் மூலம் கண்டிப்பாக குறையும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.