மும்பையில் காங்கிரஸ் கட்சியின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சியமைக்க 145 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில், 105 இடங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதாவும், 54 இடங்களில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இணைந்து மொத்தம் 159 இடங்கள் என்ற பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கின்றன.
தேவேந்திர ஃபட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராகியுள்ளார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதைத்தொடர்ந்து துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். இதனால் மகாராஷ்ரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இறுதி நேரம் வரை சிவசேனாவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியை அமைப்போம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் கூறிவந்த நிலையில் இந்தத் திடீர் திருப்பம் நடந்தேறி உள்ளது. இந்த அதிரடியான அரசியல் ஆட்டத்தின் மூலம் மகாராஷ்டிரா அரசியல் களம் சூடுப் பிடித்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக இன்று மதியம் 12.30 மணிக்கு உத்தவ் தாக்ரேவும் சரத்பவாரும் கூட்டாக சேர்ந்து செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர். அப்போது என்ன நடந்தது என்பது குறித்து அவர்கள் விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் இந்தக் குழப்பம் குறித்து கலந்தாலோசிக்க மும்பை மாநில காங்கிரஸ் கட்சியின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் மேலிட பார்வையாளர்களாக காங் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கேவும் கே.சி. வேணுகோபாலும் கலந்துக் கொள்ள உள்ளனர் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.