விளையாட்டாக ஆன்லைன் தேர்வு எழுதிய பொறியியல் மாணவரின் திறமையை அறிந்த கூகுள் அவருக்கு ரூ.1.2 கோடி சம்பளத்துடன் பணி வழங்கியுள்ளது.
கூகுள் தங்கள் நிறுவனத்துக்கு தேவையான பல இளம் ஊழியர்களை கல்லூரியிலேயே தேர்வு செய்வது வாடிக்கை. இதற்காக ஐஐடி உள்ளிட்ட கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆனால் 4ம் ஆண்டு படிக்கும் பொறியியல் மாணவர் ஒருவர் விளையாட்டாக ஆன்லைன் தேர்வு எழுத அவரின் திறமையை கண்ட கூகுள் அவரை பணிக்கு அமர்த்தவுள்ளது. அவருக்கு ரூ.1.2 கோடியை ஒரு வருடத்துக்கான சம்பளமாகவும் கூகுள் நிர்ணயம் செய்துள்ளது.
மகாராஷ்டிராவின் தானே பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா கான். இவர் அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வருகிறார். 12ம் வகுப்பு வரை சவுதி அரேபியாவில் படித்த அவர், அதற்கு பின் இந்தியா வந்தார். ஐஐடியில் சேர வேண்டுமென்பதே அவராக கனவாக இருந்துள்ளது. ஆனால் அதற்கான தேர்வுகளில் தேர்ச்சி பெறாததால் அவர் தனியார் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்துள்ளார்.
பொதுவாக ஆன்லைனில் நடைபெறும் மென்பொருள் தேர்வில் கலந்து கொள்வது அப்துல்லாவுக்கு வழக்கம். அதேபோல் கூகுள் நடத்திய தேர்விலும் விளையாட்டாக கலந்துகொண்டுள்ளார். அந்த தேர்வில் அவரை தேர்ச்சி செய்த கூகுள் நேர்காணலுக்கு லண்டன் அழைத்துள்ளது. அங்கு சென்ற அப்துல்லா, கையில் வேலையுடன் இந்தியா திரும்பியுள்ளார். அவருக்கு வருடத்துக்கு ரூ.1.2 கோடி சம்பளத்துடன் பணியை வழங்கியுள்ளது கூகுள்.
இது குறித்து பேசியுள்ள அப்துல்லா, வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் இந்த தேர்வை நான் எழுதவில்லை. விளையாட்டாகத்தான் எழுதினேன். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஐஐடி மாணவர்கள் மட்டுமே கூகுள் நிறுவனத்தில் பணிக்கு செல்லமுடியும் என்றெல்லாம் எதுவுமில்லை. திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் கூகுள் வாசலை மிதிக்கலாம் என்பதற்கு அப்துல்லா எடுத்துக்காட்டார் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.