அண்மையில் நிறைவடைந்த மக்களவை தேர்தலுக்காக மொத்தமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் என்ற தனியார் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் வாக்குகள் ஒரே நாளில் எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. நரேந்திர மோடி இரண்டாம் முறையாக நாட்டின் பிரதமரானார். மத்திய அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தல் செலவுகள் குறித்த புள்ளிவிவரங்களை சிஎம்எஸ் (Centre for Media Studies ) என்ற தனியார் ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சராசரியாக ஓட்டுக்கு ரூ.700 வீதம் செலவிடப்பட்டுள்ளதாகவும், ஒரு மக்களவை தொகுதிக்கு ரூ.100 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிய நிலையில் 2019ல் 60 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. உலக அளவில் இந்திய தேர்தலே அதிக செலவில் நடத்தப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் தெரிவித்துள்ளது.
மொத்தமாக, தேர்தலுக்காக 60 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டதாகவும் இதில் தேர்தல் ஆணையம் மட்டும் 10 முதல் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிட்டதாகவும் சிஎம்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் மொத்த செலவில் பாஜகவின் பங்கு மட்டும் 45% என்றும் சிஎம்எஸ் கூறியுள்ளது.
தேர்தலில் மிகப்பெரிய தொகை செலவிடப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் என்றும் செலவுகளை குறைக்கும் வழிவகைகள் ஆராயப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது