அமெரிக்காவின் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ள விளம்பரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து வெளியாகும் சர்வதேச நாளிதழ் 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்'. இந்த நாளிதழில் சமீபத்தில் வெளியான விளம்பரம் ஒன்றில் இந்திய அரசின் முக்கிய பிரமுகர்கள் சிலருக்கு எதிராக கருத்து வெளியிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விளம்பரத்தில் 'இந்தியாவை அந்நிய முதலீட்டிற்கு பாதுகாப்பற்ற இடமாக மாற்றிய அதிகாரிகளைப் பாருங்கள்' என்று எழுதப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்திய அமலாக்க இயக்குநரகம் உள்ளிட்டவர்களுக்குப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டு உள்ளது.
இந்த விளம்பரத்தின் பின்னணியில் தேவாஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த, நாட்டைவிட்டு தப்பியோடிய ராமச்சந்திர விஸ்வநாதன் இருப்பதாக செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் கஞ்சன் குப்தா தெரிவித்துள்ளார்.