அசாமிலிருந்து 13 பேருடன் புறப்பட்டு சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் - 32 விமானப்படை பயணிகள் விமானம் அசாமின் ஜோர்காட்டிலிருந்து 12:25 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் 5 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் இருந்தனர். அருணாச்சல பிரதேச மாநிலத்தின் மெஞ்சுகா பகுதியில் தரையிறங்க வேண்டிய விமானம் ரேடார் இணைப்பில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
மதியம் 1 மணியிலிருந்து விமானம் தொடர்பை இழந்துள்ளது. இதனையடுத்து விமானப்படை விமானங்கள் விமானத்தை தேடும் பணியை தொடங்கியுள்ளன. சுகோய் 30, சி 130 விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.
மாயமான விமானம் எதற்காக புறப்பட்டது என்பது குறித்த எந்தத் தகவலும் தற்போதுவரை வெளியிடப்படவில்லை. முழுமையான விசாரணைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியோடுதான் முழுத்தகவலும் கிடைக்கப்பெறும். இது சிறிய ரக விமானம்தான். இது பொதுவாக விமானப்படையில் தேவைப்படும் பொருட்களை ஏற்றிச்செல்லவும் மலைப்பகுதிகளில் இருக்கக்கூடிய விமானதளங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஏற்றிசெல்லவும் பயன்படுவதுதான் இந்த ஏஎன் - 32 போர் ரக விமானம்.
இன்று மதியம் தான் தேசிய பாதுகாப்புப்படை ஆலோசகராக அஜித் தோவலுக்கு கேபினட் அந்தஸ்தில் ஒரு பதவி உயர்வு கொண்டுக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் இந்த போர் விமானம் காணாமல் போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என இந்திய விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.