அமுல் நிறுவனம் ஒட்டகப் பாலை 200 மில்லி லிட்டர் கையடக்க புட்டிகளில் விற்க திட்டமிட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பால் நிறுவனம் அமுல். இந்த நிறுவனம் பால் சார்ந்த பொருட்களை இந்தியா முழுவதும் விற்று வருகிறது. அத்துடன் அவ்வப்போது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ணம் புதிய பொருட்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது ஒட்டகப் பாலை 200 மில்லி பெட் பாட்டீலில் விற்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சோதி தெரிவித்துள்ளார். அதில், “இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் அமுல் நிறுவனம் இந்தியாவில் ஒட்டகப் பாலை விற்கவுள்ளது. இதனை 200 மில்லி லிட்டர் பெட் பாட்டீலில் விற்க உள்ளோம். இதன் விலை 25 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் காந்தி நகரிலுள்ள நிறுவனத்தில் நடைபெற்று வருகிறது. இதன் விற்பனை இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம் அமுல் நிறுவனம் 500 மில்லி லிட்டர் பெட் பாட்டீலில் ஒட்டகப் பால் விற்பனையை அறிமுகப்படுத்தியது. அந்தப் பாட்டீலின் விலை 50 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.