பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நவ்ஜோத் சிங் சித்துவுக்கு திறம்பட 'செக்' வைத்துள்ளார்.
மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை சித்துவுக்கு அளிக்கக்கூடாது என்றும், துணை முதல்வர் பதவி சித்துவுக்கு அளிக்கப்பட்டால் 2 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் கட்சியின் தேசியத் தலைமைக்கு அம்ரிந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.
நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் பிரிவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டால் அல்லது துணை முதல்வர் பதவி சித்துவுக்கு மட்டும் அளிக்கப்பட்டால், அது அடுத்த வருட தேர்தலில் காங்கிரஸுக்கு எதிரான சூழலை உருவாக்கும் என காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமைக்கு அம்ரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி பலவீனம் அடைந்துள்ள நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் இந்துக்கள் வாக்குகளை காங்கிரஸ் தவற விடக்கூடாது என முதல்வர் விளக்கியுள்ளார். அம்ரிந்தர் சிங் சீக்கியர் என்பதும், நவ்ஜோத் சிங் சித்துவும் சீக்கியர் என்பதும் இந்த அரசியல் சதுரங்கத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.
முதல்வராக ஒரு சீக்கியர் பொறுப்பில் உள்ள நிலையில், தற்போது பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சுனில் குமார் செயல்பட்டு வருகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் பல்ராம் ஜாக்கர் மகனான சுனில் குமார் ஜாக்கர் இந்து மதத்தை சேர்ந்தவர். ஆகவே முதல்வராக ஒரு சீக்கியர் என்றும், கட்சியின் மாநிலத் தலைவராக ஓர் இந்து என்றும் இரண்டு மதங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்பது அம்ரிந்தர் சிங் ஆதரவாளர்களின் வாதம்.
நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டாடால், முதல்வர் மற்றும் கட்சித் தலைவர் பொறுப்புகள் இரண்டுமே சீக்கியர்கள் வசம் உள்ள நிலையில், இந்துக்கள் அதிருப்தி அடையலாம் என அம்ரிந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார். நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அம்ரிந்தர் சிங் இரண்டு பேரும் பட்டியாலாவை சேர்ந்தவர்கள் என்பதும் இரண்டு பேருமே சீக்கியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சித்துவை பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கக் கூடாது என்றும், ஒருவேளை சித்துவை துணை முதல்வராக நியமிப்பதாக இருந்தால் கூடவே இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரையும் துணை முதல்வராக நியமிக்க வேண்டும் என்பது அம்ரிந்தர் சிங் ஆதரவாளர்களின் வாதம்.
இதனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையில் குழப்பம் நிலவுகிறது. சித்துவுக்கு வாய்ப்பு அளிப்பதன் மூலம் கட்சியின் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படக் கூடாது என கட்சியின் சில மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள். மேலும் அம்ரிந்தர் சிங் சென்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற முக்கிய பங்காற்றினார் என்பதும், அடுத்த வருட
சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவர் தலைமையிலேயே போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதனால் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு நெருக்கமாக இருந்தபோதிலும் இதுவரை நவ்ஜோத் சிங் சித்துவுக்கு அவர் கோரியபடி முக்கிய பதவிகள் கிடைக்கவில்லை. அம்ரிந்தர் சிங் கட்சியின் தேசிய தலைமைக்கு நெருக்கமாக இல்லை என்று சொல்லப்பட்டாலும் அவர் பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை வலுவான நிலையில் உள்ளார் என கருதப்படுகிறது.
சமீபத்தில் டெல்லியில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சந்தித்த பிறகு தனக்கு முக்கிய பதவிகள் கிடைக்கும் என எதிர்பார்த்த சித்துவின் ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பஞ்சாபில் வலுப்பெற துடிக்கும் ஆம் ஆத்மி கட்சியை குறிப்பிட்டு சமீபத்தில் சித்து ட்வீட் மூலம் வெளியிட்டிருக்கும் பதிவுகள் அவருடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறது என பஞ்சாப் மாநில அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள்.
ஆம் ஆத்மி கட்சி தன்னுடைய 'பஞ்சாப் மக்கள் ஆதரவு' நிலைப்பாட்டை உணர்ந்துள்ளது என சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அர்விந்த் கெஜ்ரிவால் சில மாதங்களாகவே சிந்துவை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், அம்ரிந்தர் சிங்கால் சமீபத்தில் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள பிரசாந்த் கிஷோர் டெல்லியில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்தது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவ்ஜோத் சிங் சித்து 2017-ஆம் வருடம் வரையில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்தார் என்றும், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவருக்கு எப்படி முக்கியப் பொறுப்பு அளிக்கலாம் என்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். சென்ற வருடம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி மற்றும் தற்போது மத்திய அமைச்சர் பதவி ஆகியவை அளிக்கப்பட்டு இருப்பதை சித்துவின் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.
ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே பூசல் நீடித்து வரும் நிலையில், நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவாரா என்ற கேள்வியும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள்
மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கணபதி சுப்பிரமணியம்