உஜ்ஜைனில் உள்ள மகாகலேஷ்வர் ஜோதிர்லிங்கா கோயிலுக்குள் செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து, எவரெஸ்ட்டில் ஏறி சாதனை படைத்த அருணிமா சின்கா வேதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் கூடைப்பந்து வீராங்கனையான அருணிமா சின்கா, கடந்த 2011 ஆம் ஆண்டு ரயிலில் சென்ற போது நிகழ்ந்த கொள்ளை முயற்சியைத் தடுக்க முயன்றபோது, கீழே தள்ளிவிடப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவரது ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதனால் தொடர்ந்து கூடைப்பந்து விளையாட இயலாமல் போன போதிலும், மனம் தளராத அவர், ஒற்றைக் காலுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
இத்தகைய சூழலில், நேற்று முன்தினம் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகாகலேஷ்வர் கோயிலுக்கு அருணிமா சென்றபோது அவர் அணிந்திருந்த உடையைக் காரணமாகக் காட்டி உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. தான் வழக்கமாக அணியும் உடைகளையே உடுத்திச் சென்றதாக அவர் கூறியுள்ளார்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியபோது ஏற்பட்ட வலியைவிட மகாகலேஷ்வர் கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டபோது அதிக வலி ஏற்பட்டதாக அருணிமா சின்கா வேதனையுடன் கூறியுள்ளார். தனது உடல் குறைபாடு பரிகாசம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கு நேர்ந்த கதி குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அருணிமா சின்கா, அதனை மத்திய பிரதேச முதலமைச்சருக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் இணைத்துள்ளார்.