எதிர்வரும் அமர்நாத் யாத்திரையின் போது பக்தர்களுகான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அலட்சியமாக இருக்கவேண்டாம் என அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.
காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகை கோவிலில் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்தாண்டுக்கான யாத்திரை வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பாஜகாவின் தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான,அமித்ஷா ஜம்மு- காஷ்மீர் சென்றுள்ளார்.
அங்கு அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு குறித்தும் ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பக்தர்களுக்கு அனைத்து பாதுகாப்பும் வழங்கவேண்டும் என்றும், பாதுகாப்புக்கான நடைமுறைகளை முழுமையாக செயல்படுத்தவேண்டும் என அமித் ஷா அறிவுறுத்தியதாக உள்நாட்டு பாதுகாப்பு சிறப்புச் செயலாளர் ஏ.பி. மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.