மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. மிகத்தீவிரமாக நடைபெற்றுவரும் பரப்புரைகளில் பாஜக கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் பல்வேறு விதமான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையில் 25 அம்ச ‘சங்கல்ப் பத்ரா 2024’ எனும் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார். மகளிருக்கு மாதம் 2100 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதியோர் ஓய்வூதியம் மாதம் 1,500 ரூபாயிலிருந்து 2,100 ரூபாயாக அதிகரிக்கப்படும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் மற்றும் காப்பீடு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழை மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பது மற்றும் அவர்கள் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவையும் பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதிமொழிகளாக இடம்பெற்றுள்ளன. அக்ஷய் அன்ன யோஜனா திட்டம் மூலம் ஏழை மக்களுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு கடன் ரத்து, மகளிருக்கு உதவித்தொகை அதிகரிப்பு, மற்றும் இளைஞர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு என இந்த பிரிவினரை கவர பாஜக தனது அறிக்கையில் அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. இதே போன்ற வாக்குறுதிகளை ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவார் பிரிவு மற்றும் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே பிரிவு வலியுறுத்தி வருகின்றன. இந்த இரண்டு கட்சிகளும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து மகாயூதி கூட்டணி என்கிற பெயரில் மகா விகாஸ் ஆகாடியை எதிர்த்து போட்டியிடுகின்றன.
நிகழ்வில் பேசிய அமித்ஷா, “மதரீதியாக இட ஒதுக்கீடு அளிக்கப்படாது. ஜாதி ரீதியாக மட்டுமே இட ஒதுக்கீடு அளிக்கப்படும். மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு பாஜக கூட்டணி ஆட்சி அத்தியாவசியம்.
நாங்கள் மகாராஷ்டிராவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம். மகாராஷ்டிரா மாநிலத்தில் மிகவும் நேசிக்கப்படும் வீர் சாவர்க்கரை புகழ்ந்து பேசும்படி ராகுல் காந்திக்கு சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு கோரிக்கை வைக்குமா?” என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி வீர் சாவர்க்கர் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு அவரை மகாராஷ்டிரா மாநிலத்தின் மிகப்பெரிய தலைவர்களுள் ஒருவராக கொண்டாடி வருகிறது.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே மற்றும் மும்பை பாஜக தலைவர் ஆசிஷ் ஷேலர் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.