நாட்டை பிளவுபடுத்தவா குடியுரிமை திருத்த மசோதா? - எதிர்ப்புகளுக்கு மக்களவையில் அமித்ஷா விளக்கம்

நாட்டை பிளவுபடுத்தவா குடியுரிமை திருத்த மசோதா? - எதிர்ப்புகளுக்கு மக்களவையில் அமித்ஷா விளக்கம்
நாட்டை பிளவுபடுத்தவா குடியுரிமை திருத்த மசோதா? - எதிர்ப்புகளுக்கு மக்களவையில் அமித்ஷா விளக்கம்
Published on

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு மக்களவையில் 293 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 82 எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை சட்டம் சிறுபான்மையினருக்கு பூஜ்யம் புள்ளி பூஜ்யம் பூஜ்யம் ஒரு சதவிகிதம் கூட எதிரானது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “அன்றைக்கு இந்திரா காந்தி, 14வது சட்டப்பிரிவை மேற்கோள் காட்டி பங்களாதேஷில் இருந்து மக்களை அழைத்து வருவதற்காக கூறினார். ​​அப்போது ஏன் பாகிஸ்தானை பற்றி சொல்லவில்லை. உகாண்டாவிலிருந்து கூட மக்களை அழைப்போம் என அவர் சொல்லவில்லை. ஏன் இங்கிலாந்து சொல்லவில்லை?  இத்தனை ஆண்டுகளில், உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான மக்களை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் இது போன்று வேறு எங்கும் இல்லை. அமெரிக்காவில் வழங்கப்படும் கிரீன் கார்டை பாருங்கள். அதில் இதேபோன்றே கடுமையான விதிமுறைகள் உள்ளன” என்று மக்களவையில் விளக்கம் அளித்து அமித் ஷா கூறினார்.

மேலும் பேசிய அவர், “ இந்தியா அருகே மூன்று அண்டை நாடுகள் உள்ளன. பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை அதில் அடங்கும். இவர்களின் நிலப்பகுதியில் இஸ்லாம்தான் அவர்களின் சட்டமாக உள்ளது என்று அந்த அரசியலமைப்பு சட்டங்கள் கூறுகின்றன. நாட்டின் பிரிவினையின் போது, ​​சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே நேருவிற்கும் லியாகத்திற்குமான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இந்தியாவில் முறையாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் மோசமாக நடத்தப்பட்டுள்ளனர்” என்றும் குறிப்பிட்டார்.  

அமித் ஷாவின் இந்த விளக்கம் மக்களவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் தொடர்ந்து அமித்ஷா பேசுகையில்,  “பாஜக நாட்டை பிளவுபடுத்தவில்லை. ஆனால், காங்கிரஸ்தான் அதை செய்தது. இந்த மசோதா முஸ்லிம் மக்களின் உரிமைகளை பறிக்கும் என்று கூறவில்லை. காங்கிரஸ் இந்த நாட்டை மதத்தின் அடிப்படையில் பிரித்தது. இந்த காரணத்திற்காகவே இந்த மசோதா எங்களுக்கு தேவை. இந்த மசோதாவால் 1.75 கோடி மக்கள் பயனடைவார்கள். அதனால் இதனை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை” என்று அவர் கூறுகிறார்.

ஆனால், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதனை ஏற்காததால் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதே சமயம் அதிமுக குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்துள்ளது. இதற்கிடையே அசாம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com