காஷ்மீரில் வசிக்கும் வெளி மாநிலத்தவர் பயங்கரவாதிகளால் கொல்லப்படுவது அதிகரிக்கும் நிலையில் அதுகுறித்து பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆலோசனை நடத்தினர்.
பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் அமித் ஷாவுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் பங்கேற்றார். காஷ்மீரின் தற்போதைய நிலவரம், அரசுத்தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அடுத்து மேற்கொள்ளப்பட உள்ள நகர்வுகள் குறித்து பிரதமருக்கு அமித் ஷா விளக்கியதாக தெரிகிறது. இதற்கிடையே காஷ்மீர் நிலவரத்தை ஆய்வுசெய்ய அமைச்சர் அமித் ஷா வரும் சனிக்கிழமை அங்கு செல்கிறார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அவர் பேசுவார் எனத் தெரிகிறது. காஷ்மீரில் கடந்த 2 வாரங்களில் மட்டும் பொதுமக்கள் 11 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக பண்டிட் இனத்தவர்களும் காஷ்மீரில் வசிக்கும் வெளிமாநிலத்தவரும் முக்கிய இலக்காக உள்ளனர்.
இத்தாக்குதல்களின் பின்னணி குறித்து விரிவாக விசாரிக்க என்ஐஏ-வுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே காஷ்மீரில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பீகார் தொழிலாளர்கள் உயிர் பயத்தில், கிடைக்கும் பேருந்திலும் ரயிலிலும் ஏறி வெளியேறி வருகின்றனர். பயங்கரவாதிகள் பொதுமக்களின் ஆதார் அட்டைகளை சோதித்து வெளிமாநிலத்தவராக இருந்தால் தாக்குவதாக பீகார் தொழிலாளர்கள் அச்சத்துடன் கூறுகின்றனர். தங்கள் மாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு தரவேண்டும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹாவிடம் தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.