உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதியில் மையமாக உள்ள ஊர் அமேதி. 1967இல் இத்தொகுதி உருவாக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து 16 தேர்தல்களை இத்தொகுதி கண்டுள்ளது. அதில் 1977, 1998, 2019 தவிர மற்ற 13 முறையும் காங்கிரஸ் கட்சியே இங்கு வெற்றிபெற்று வந்துள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகனான சஞ்சய் காந்தி 1977இல் காங்கிரஸ் சார்பில் அமேதியில் போட்டியிட்டார். அவசர நிலை பின்னணியில் நடந்த இத்தேர்தலில் சஞ்சய் காந்தி தோல்வியடைந்தார். அமேதி தொகுதிக்கும் நேரு குடும்பத்திற்குமான தொடர்பு இந்தாண்டிலிருந்து தான் தொடங்கியது.
1980இல் மீண்டும் போட்டியிட்ட சஞ்சய் காந்தி வெற்றிக்கனியை பறித்தார். ஆனால் சில மாதங்களிலேயே அவர் விமான விபத்தில் மரணம் அடைந்ததால், இடைத்தேர்தலை சந்தித்தது அமேதி. அப்போது போட்டியிட்ட சஞ்சய் காந்தியின் அண்ணன் ராஜிவ் காந்தி 84% வாக்குகளை பெற்று அமோக வெற்றிபெற்றார்.
1984 இல் இந்திரா காந்தி படுகொலைக்கு பின் நடந்த தேர்தலில் இத்தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட தனது தம்பி மனைவியான மேனகா காந்தியை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராஜிவ் காந்தி வென்றார்.
அப்போது ராஜிவ் பெற்ற வாக்குகள் 83%. இதைத்தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றிபெற்ற ராஜிவ் காந்தி 1991-யிலும் இங்கு வெற்றிபெற்றார். ஆனால் வெற்றிபெற்ற அறிவிப்பு வெளியான போது அவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இதையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலிலும், இதன் தொடர்ச்சியாக 1996இல் நடந்த தேர்தலிலும் ராஜிவ் காந்தியின் நெருங்கிய நண்பரான சதீஷ் சர்மா வெற்றிபெற்றார். 1998இல் பாஜகவின் சஞ்சய் சிங் வெற்றி பெற்ற நிலையில் 1999இல் சோனியா காந்தி வெற்றி பெற்றார்.
2004, 2009, 2014ஆம் ஆண்டுகளில் ராகுல் காந்தி வெற்றி பெற்ற நிலையில் 2019இல் அவர் தோல்வியை தழுவினார். பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஸ்மிருதி இரானி இங்கு போட்டியிடுகிறார். ஆனால் ராகுல்காந்தி, ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார்!