ஜான் அலன் சாவ் அமெரிக்காவின் வான்கூவர் நகரத்தைச் சேர்ந்தவர். மதபோதகரான ஜான், கிறிஸ்தவ மதத்தை பரப்பி வந்தார். அவரது குடும்பத்தினர் கூற்றுப்படி ஜான் ஒரு மதபோதகர் மட்டுமல்ல. கால்பந்து பயிற்சியாளர், மலையேறுதலில் ஆர்வம் கொண்டவர். கடவுளையும் வாழ்வையும் நேசித்தவர். ஜான் 2015ஆம் ஆண்டு முதல் 4 முறை அந்தமானுக்கு வந்திருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் சுற்றுலா விசாவில் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேருக்கு வந்தார் ஜான். அந்தமான் தீவுக்கூட்டங்களில் ஒன்றான வடக்கு சென்டினல் தீவுக்கு செல்வதே அவரது திட்டம். அதற்காக மீனவர்களுக்கு பணம் கொடுத்திருக்கிறார். அவர்களுடன் சென்டினல் தீவுக்கு சென்றார் ஜான்.
மீனவர்கள் தீவுக்குள் நுழையவில்லை. அங்கு சென்றால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் ஜான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. சிறு படகில் வடக்கு சென்டினல் தீவுக்குள் நுழைந்தார். அங்கு என்ன நடந்தது என்பதை அவரே தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். அதன்படி சென்டினல் தீவுக்குள் நுழைந்த ஜானும் அங்கிருக்கும் பழங்குடிகளும் சந்தித்துக் கொள்கின்றனர்.
அவர்கள் ஐந்தரை அடி உயரம் கொண்டவர்களாக இருந்தார்கள் என்கிறார் ஜான். பழங்குடிகளின் முகத்தில் மஞ்சள் நிறத் திட்டுகள் இருந்தன எனக் கடிதத்தில் குறிப்பிடுகிறார். தான் பரிசாக கொண்டு சென்ற கால் பந்துகளையும், மீன்களையும் பழங்குடிகள் முன்பு தூக்கி வீசிய பின்பு, எனது பெயர் ஜான், நான் உங்களை நேசிக்கிறேன், இயேசு உங்களை நேசிக்கிறார் என்று கூறியதாக தெரிவித்துள்ளார் அவர்.
வேற்று மனிதரை கண்டதும் கோபம் கொண்ட பழங்குடிகள் ஜானை நோக்கி சிறு அம்புகளை எய்துள்ளனர். அதில் ஒரு சிறுவனும் இருந்ததாக கடிதத்தில் கூறுகிறார் ஜான். எய்யப்பட்டதில் ஒரு அம்பு ஜான் தனது நெஞ்சுக்கு அருகே வைத்திருந்த பைபிளில் பாய்ந்து அவர் உயிரைக் காப்பாற்றியது. மரணத்தின் வாயில் வரை சென்று திரும்பிய ஜான், தன்னை கொல்ல முயன்றவர்களை மன்னித்துவிடுங்கள் என கடிதத்தில் அவரது தந்தைக்கு சேதியும் சொல்லியுள்ளார். தாக்குதலைத் தொடர்ந்து உடனடியாக படகுக்கு திரும்பினார் ஜான். நீந்தி படகுக்குச் சென்ற தன்னை பழங்குடிகள் துரத்தி வந்ததாகவும் கடிதத்தில் ஜான் தெரிவித்துள்ளார். பழங்குடிகள் தனது படகை சேதப்படுத்த முயன்றதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
கடித வரிகள் வாழ்வின் மீது ஜானுக்கு இருந்த ஆசையை உணர்த்துகின்றன. கடவுளே நான் உயிரிழக்க விரும்பவில்லை. நான் உயிரிழந்து விட்டால் எனது இடத்தை யார் நிரப்புவார்? என்றெல்லாம் கடிதம் மூலம் கடவுளிடம் கேள்வி கேட்கிறார் ஜான். தனது குடும்பத்தினரை நினைவுகூரும் ஜான், படகில் இருப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை, எனக்கு இந்தி தெரியவில்லை, அதனால் அவர்களின் கருத்தைக் கேட்க முடியவில்லை என்கிறார். சென்டினல் தீவு சாத்தானின் இருப்பிடம் என்கிறார். கடவுளின் பெயரை கேட்க வாய்ப்பில்லாத இடம் சென்டினல் தீவு எனக் கடிதத்தில் கூறுகிறார் ஜான். சென்டினல் தீவுக்குச் செல்லாமல் திரும்பினால், தான் தோற்றுப்போனவன் ஆவேன் என்கிறார். இது எனது கடைசிக் கடிதம் என்று நினைக்கவில்லை. அப்படி கடைசி கடிதமாக இருந்தால் அது கடவுளின் மகிமை எனக்கூறுகிறார்.
தான் எழுதிய கடிதத்தை மீனவர்களிடம் கொடுத்துவிட்டு, அடுத்தநாள் மீண்டும் சென்டினல் தீவுக்குள் சென்றார் ஜான். போனவர் திரும்பவில்லை. பழங்குடிகள் அம்பு எய்து ஜானை கொன்று விட்டதாக கூறப்படுகிறது. மண்ணில் புதைந்த நிலையில் ஜானின் உடலை மீனவர்கள் பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜானை சென்டினல் தீவுக்கு அழைத்துச் சென்றதற்காக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களை விடுவித்துவிடும்படி ஜானின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜானை பழங்குடிகள் கொலை செய்தது ஏன் என்பதை அறிய அவர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். வடக்கு சென்டினல் தீவு சுமார் 60 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. வெளியாட்கள் நுழைய தடை செய்யப்பட்ட இடம். இங்கு வாழும் பழங்குடிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் வசித்த மனிதர்களின் வழித்தோன்றல்கள் எனக் கூறப்படுகிறது.
சென்டினல் தீவில் சுமார் 150 பேர் வரை வசிக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் கற்காலத்தை ஒத்தவையாகவே இருக்கின்றன. இதன் மூலம் மனித நாகரீகத்தில் இவர்கள் எவ்வளவு பின்தங்கி இருக்கிறார்கள் என்பதை அறியலாம். சென்டினல் பழங்குடிகள் தங்கள் இடத்தை விட்டு வெளியே வரவும் மாட்டார்கள், தங்கள் இடத்திற்குள் வேறு யாரும் நுழைவதை விரும்பவும் மாட்டார்கள். வேற்று மனிதர் சென்டினல் தீவில் காலை வைத்தால் அவரது உயிருக்கு உத்தரவாதமில்லை.
தங்கள் இடத்திற்கு வருபவர்களை சென்டினல் தீவு பழங்குடிகள் கொலை செய்வது ஒன்றும் புதிதல்ல. 18 நூற்றாண்டிலேயே இதுபோன்ற தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. 2004ஆம் ஆண்டு சுனாமியின் போது தங்களை மீட்க அதிகாரிகளை கூட பழங்குடிகள் தாக்கினர். 2006ஆம் ஆண்டு வழிதவறிச் சென்ற இரண்டு மீனவர்களை பழங்குடிகள் கொலை செய்தனர். மீனவர்களின் உடலை எடுக்கச் சென்ற கடலோர பாதுகாப்புப்படை ஹெலிகாப்டர்கள் மீதே அம்பு எய்திருக்கின்றனர் சென்டினல் பழங்குடிகள். அப்படி என்றால் வேற்று மனிதர்கள் யாரும் சென்டினல் தீவுக்குள் நுழைந்துவிட்டு உயிரோடு திரும்ப முடியாதா? அதுவும் ஒருமுறை நடந்திருக்கிறது. அது 1991ஆம் ஆண்டு.
பழங்குடிகளை சந்திக்க குழு ஒன்று பரிசுப் பொருள்களுடன் சென்றது. குழுவினர் வழங்கிய பரிசுப் பொருள்களை சென்டினல் பழங்குடியினர் பெற்றுக்கொண்டனர். ஆனால் அதன்பிறகு அப்படி ஒன்று நடக்கவேயில்லை. சென்டினல் பழங்குடிகள் நாகரீக வளர்ச்சி பெற்றவர்களை வேற்று மனிதர்களாகவே பார்க்கின்றனர். அவர்களின் வாழ்வியலை பற்றிய தகவல்கள் கூட முழுமையாக இல்லை. அறிவியலும் நாகரீகமும் அசுர வளர்ச்சி பெற்று விட்ட இந்தக்காலத்தில் சென்டினல் பழங்குடிகள் அதிசயமானவர்கள்தாம்.