மத்திய சமூக நீதித்துறையின் கீழ் உள்ள டாக்டர் அம்பேத்கர் ஃபவுன்டேஷனில், கடந்த 4 நிதி ஆண்டுகளில் 19 மாநிலங்களில் ஒருவர் கூட பயனாளியாக இல்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
சாதிய வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் 2017 - 18 ஆம் நிதியாண்டில் டாக்டர் அம்பேத்கர் ஃபவுன்டேஷன் அமைக்கப்பட்டது. இதன் செயல்பாடுகள் குறித்தும் பயன்பெற்றவர்கள் குறித்தும் மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்ற சமூக ஆர்வலர் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற்றார்.
அதன்படி, இந்த ஃபவுன்டேஷன் மூலம் இதுவரை உத்தரப்பிரதேசம், குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் 137 பேர் மட்டுமே பயனடைந்துள்ளது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 19 மாநிலங்களில் ஒருவர் கூட பயன்பெறவில்லை. திட்டம் தொடங்கப்பட்ட 4 நிதியாண்டுகளில் நாடு முழுவதும் 4 கோடியே 79 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5 பேர் மட்டுமே பயன்பெற்றுள்ளனர். டாக்டர் அம்பேத்கர் ஃபவுன்டேஷனுக்கு முதல் ஆண்டில் 2 கோடியே 20 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்ட நிலையில் இது கடந்த நிதியாண்டில் ஒரு கோடியே 2 லட்சம் ரூபாயாகக் குறைந்துள்ளது.