100 டன் மருத்துவ ஆக்ஸிஜன்... - கொரோனாவுக்கு எதிரான போரில் கைகொடுக்கும் அம்பானி!

100 டன் மருத்துவ ஆக்ஸிஜன்... - கொரோனாவுக்கு எதிரான போரில் கைகொடுக்கும் அம்பானி!

100 டன் மருத்துவ ஆக்ஸிஜன்... - கொரோனாவுக்கு எதிரான போரில் கைகொடுக்கும் அம்பானி!
Published on

நாட்டின் பல இடங்களில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ ஆக்ஸிஜனின் பற்றாக்குறை நிலவும் சூழலில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டர்ஸ்ட்ரீஸ் நிறுவனம் இலவசமாக மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் அளிக்க முன்வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் எதிர்ப்பு மருந்து ரெம்டெசிவிர் மற்றும் மருத்துவ ஆக்ஸிஜனின் பற்றாக்குறை பல மாநிலங்களில் ஏற்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவமனை படுக்கைகளின் பற்றாக்குறையால் நோயாளிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்த நிலையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு தேவை என்றும், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் எடுத்து செல்லும் கனரக வாகனங்களின் முழுநேர இயக்கத்தை உறுதிசெய்யவேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இந்த நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ள மருத்துவமனைகளுக்கு உதவ இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி முன்வந்துள்ளார். "மேற்கு இந்தியாவில் உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு வளாகத்தை இயக்கும் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஜாம்நகரில் இருந்து மகாராஷ்டிராவுக்கு ஆக்ஸிஜனை எந்த செலவுமின்றி வழங்கத் தொடங்கியுள்ளது" என்று இது தொடர்பாக பேசியுள்ள அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் 'தி பிரின்ட்' செய்தித் தளத்திடம் தெரிவித்துள்ளார்.

மேலும், ரிலையன்ஸ் தனது பெட்ரோலிய அலகுகளில் உள்ள சில ஆக்ஸிஜன் பைப்புகளை மருத்துவ பயன்பாட்டிற்கு ஏற்றதாக மாற்றிய பின் திருப்பிவிடும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனை மகாராஷ்ட்ரா அரசும் உறுதி செய்துள்ளது. "மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து 100 டன் ஆக்ஸிஜன் கிடைக்கும்" என்று அம்மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அரசு நடத்தும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் - தென்னிந்தியாவில் உள்ள கொச்சி சுத்திகரிப்பு நிலையம் 20 டன் மருத்துவ ஆக்ஸிஜனைக் கையிருப்பாகக் கட்டியுள்ளது, அதை உடனடியாக வழங்க முடியும் என்று நிறுவனம் மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதே கொச்சி சுத்திகரிப்பு நிலையம் இதற்கு முன்னர் மருத்துவ பயன்பாட்டிற்காக 25 டன் ஆக்ஸிஜனை வழங்கியது.

கொச்சி ஆலையில் இருந்து பாரத் பெட்ரோலியம் தினமும் சுமார் 1.5 டன் ஆக்ஸிஜனை மேலும் வழங்க முடியும். அங்கு மருத்துவ தர ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யக்கூடிய ஓர் அலகு உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைட்ரஜன் உற்பத்திக்கான காற்று பிரிக்கும் ஆலைகளில் சுத்திகரிப்பு நிலையங்கள் குறைந்த அளவு தொழில்துறை ஆக்ஸிஜனை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com