புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை இம்மாதம் 28-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்புக்காக பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் பயணம் செய்வார்கள். இந்த நிலையில் இந்த வருடத்திற்கான அமர்நாத் யாத்திரை இம்மாதம் 28-ஆம் தேதி தொடங்க உள்ளது. எனவே பக்தர்களின் பாதுகாப்பிற்காக பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக காஷ்மீர் மாநில அரசு தெரிவித்துள்ளது.
பக்தர்களின் வாகனங்களை செயற்கைக் கோள் மூலம் கண்காணிப்பது, செல்போன் ஜாமர்கள், சிசிடிவி கேமராக்கள், குண்டு வீச்சு துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க நிலவறைகள், வெடிகளை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் என ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கூடுதலாக 22,000 பாதுகாப்பு படையினரை மத்திய அரசிடம் காஷ்மீர் மாநில அரசு கேட்டுள்ளது. மாநில போலீசாரும் சிஆர்பிஎஃப் உள்ளிட்ட துணை ராணுவ படைகள், ராணுவ வீரர்கள் என பாதுகாப்பு படையினர் அமர்நாத் யாத்திரை பாதையில் குவிக்கப்பட உள்ளனர். முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வாரம் நேரில் ஆய்வு செய்தார். இமாலய மலைத்தொடர்களில் உள்ள அமர்நாத்தில் கடந்தாண்டு யாத்திரையின் போது 2 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்தனர்.