அல்வா கொண்டாட்டம் கட்; முழுக்க டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

அல்வா கொண்டாட்டம் கட்; முழுக்க டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்
அல்வா கொண்டாட்டம் கட்; முழுக்க டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்
Published on

கோவிட் பரவல் அதிகரித்துள்ளதால், இந்த வருடம் வழக்கமான அல்வா கிண்டும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு பேப்பர் கூட இல்லாத டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பட்ஜெட் என்றாலே உடனே நினைவுக்கு வருவது நாடாளுமன்ற வளாகத்திலேயே காலையில் இருந்தே பரபரப்பு; பட்ஜெட் ஆவணங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக மோப்பம் பிடிக்கும் பாதுகாப்புப் படையின் மோப்ப நாய்கள்; வரி விதிப்பு தொடர்பான ஆவணங்கள்; மற்றும் துறை சார்ந்த ஒதுக்கீடுகள் அடங்கிய நிதி அமைச்சரின் உரை.

கோவிட் பரவல் அதிகரித்துள்ளதால், இந்த வருடம் வழக்கமான அல்வா கிண்டும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு பேப்பர் கூட இல்லாத டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்பதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் தாக்கமாக உள்ளது. 

"யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப்" என்கிற செயலி மூலம் பட்ஜெட் தொடர்பான 14 ஆவணங்கள் விநியோகிக்கப்படும் என நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "இந்தியா பட்ஜெட்" என்கிற இணையதளம் மூலமும் இந்த ஆவணங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

பிப்ரவரி 1ஆம் தேதியன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழக்கமாக கிடைக்கும் பட்ஜெட் ஆவணங்கள் இந்த வருடம் கிடைக்காது. அதேபோல  பட்ஜெட் அறிவிப்புகள் தொடர்பான செய்தி குறிப்புகளும் அச்சிடப்படாது.  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்ய, டிஜிட்டல் ஆவணம் மூலம் தனது உரையைப் படிக்க உள்ளார்.

தனது பங்குக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா " டிஜிட்டல் சன்சத்" என்கிற செயலியை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். இந்த செயலி மூலம் மக்களவை மற்றும் மாநிலங்களவை நிகழ்வுகளை நேரலையாக காணலாம். நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாத உரைகளையும் படிக்கலாம்.

கோவிட் பரவல் குறையவில்லை என்பதால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதியில் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்த காலையில் மாநிலங்களவை மற்றும் மாலையில் மக்களவை என அமர்வுகளை வெவ்வேறு நேரங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத் தொடரின் முதல் பாகத்தில் பார்வையாளர்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் ஆவணங்களை தயாரிப்பவர்கள் ஒவ்வொரு வருடமும் ரகசியங்கள் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்காக, நிச்சயம் அச்சகத்தில் இதற்காக நிர்மாணிக்கப்பட்டு இருக்கும் பிரத்யேக அச்சகத்தில் தங்களை பட்ஜெட் நாள்வரை தனிமைப்படுத்திக் கொள்வார்கள். குடும்பத்தினரை தொடர்பு கொள்ள அலைபேசியை கூட பயன்படுத்தக்கூடாது என கண்டிப்பான விதிமுறைகள் அமலில் இருக்கும்.

இத்தகைய தனிமைப்படுத்துதல் தொடங்குவதை குறிக்கும் வகையில் நிதி அமைச்சர் தன் கையாலேயே அல்வா கிண்டி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்குவார். கோவிட் பரவலைத் தடுக்க இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த வருடம் இனிப்பு பொட்டலங்கள் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடருக்கு முன்பாக நடத்தப்பட்ட பரிசோதனைகளில் பலநூறு மக்களவை மற்றும் மாநிலங்களவை ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால் இத்தகைய தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

- கணபதி சுப்பிரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com