சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வழங்கிய தீர்ப்புகளின் முழு விவரம்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கடந்த 2006ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த நீதிமன்றம் விளக்கம் கேட்டு திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கும் கேரள அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. ஆட்சி மாற்றங்களின் போது கேரள அரசு மாறுபட்ட நிலைப்பாடுகளை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்திய இளைஞர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டனர். வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு சபரிமலை கோயிலில் பத்து முதல் 59 வயது வரையிலான பெண்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை நேற்று வழங்கியது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில்கர் ஆகியோர் ஒரு தீர்ப்பையும் நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, சந்திரசூட், ரோஹிண்டன் நாரிமன் ஆகியோர் தனித்தனியாகவும் தீர்ப்பு வழங்கினார்கள்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில்கர் அளித்த தீர்ப்பு:
·பெண்கள் சபரிமலை கோவிலில் விலக்கி வைக்கப்படுவது மதத்தின் ஒரு பகுதி அல்ல.
· ஆண், பெண் இருவருமே சமமானவர்கள். வழிபாடு அடிப்படை உரிமை.
· மாதவிடாய் காரணங்களை வைத்து பெண்களின் உரிமைகளை பறிக்க முடியாது.
· பக்தி என்பது பாலின பாகுபாட்டுக்கு உட்பட்டது அல்ல.
· பெண்களை தெய்வமாக வழிபடும் நாட்டில் அவர்களை பலவீனமாக நடத்த முடியாது.
· சாத்தியமற்ற விதிகளை கடைபிடிக்கச்சொல்வது ஒருசாராரின் உரிமையை பறிப்பது
நீதிபதி சந்திரசூட்:
· பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்காமல் இருப்பது தீண்டாமை
· மாதவிடாயை கொண்டு பாகுபாடு காட்டும் தீண்டாமை நீக்கப்பட வேண்டும்
· பெண்களை தவறாக நடத்தக்கூடிய செயல்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கக்கூடாது.
நீதிபதி நரிமன்:
· அய்யப்ப பக்தர்களின் வழிபாடும் இந்து மத வழிபாடுகளில் ஒன்றே.
· வழிபடும் அடிப்படை உரிமையை தடுப்பது பெண்களின் உரிமைகளை பறிப்பதாகும்.
· சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை அரசியலமைப்பு சட்டம் விதி 26 க்கு எதிரானது.
· அனைத்து வயதுடைய பெண்களும் ஐயப்பனை வழிபட சம உரிமை கொண்டவர்களே
நீதிபதி இந்து மல்ஹோத்ரா:
· மத நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் நீதிமன்றம் தலையிடக்கூடாது.
· ஐய்யப்ப பக்தர்களின் நம்பிக்கையில் அரசோ, நீதிமன்றமோ தலையிடக்கூடாது
· சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டுதான் முடிவெடுக்க வேண்டும்
அமர்வின் 4 நீதிபதிகள் ஒரு தீர்ப்பையும், 5 ஆவது நீதிபதி இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கியுள்ளனர்.