ஒடிசாவில் அமைந்துள்ள பூரி ஜெகன்நாத் கோவிலுக்குச் சொந்தமான 545 கோடி ரூபாயை யெஸ் வங்கியிலிருந்து விடுவிக்குமாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒடிசா நிதி அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
Allow Puri Jagannath Temple to withdraw funds from Yes Bank: Odisha FM writes to Sitharamanமும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது யெஸ் வங்கி. இந்த வங்கி சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவு வாராக் கடனால் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து யெஸ் வங்கியின் மோசமான நிதி நிலையை கருத்தில் கொண்டு, மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி அந்த வங்கி நிர்வாகத்தை 30 நாட்களுக்கு தற்காலிகமாக எடுத்துக் கொள்வதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. அத்துடன் யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், பூரி ஜெகன்நாத் கோவிலுக்குச் சொந்தமான 542 கோடி ரூபாயை விடுவிக்குமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒடிசா நிதி அமைச்சர் நிரஞ்சன் புஜாரி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “ ஒடிசா மாநிலம் பூரி நகரில் அமைந்துள்ள ஜெகன்நாத் கோவிலின் நிர்வாகம், மேலாண்மை மற்றும் கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆகியவற்றை ஸ்ரீ ஜெகன்நாத் கோவில் நிர்வாகக் குழு 1954 ஆம் ஆண்டு கொண்டுவந்த விதிமுறைகளின் படி கவனித்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் நாள்தோறும் கோவில் தொடர்பான அனைத்து நிர்வாக வேலைகளையும் இந்தக் குழு கவனித்து வருகிறது.
பூரி ஜெகன்நாத் கோவிலுக்கு அறக்கட்டளை உள்ளிட்ட பலவழிகளில் நிதி வருகிறது. இந்த நிதி முழுவதும் அந்த நிர்வாகக்குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த நிதிகளை தவிர்த்து கோவிலுக்குச் சொந்தமான 542 கோடி ரூபாய் பூரி நகரில் உள்ள யெஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த வைப்பு நிதி இந்த வருடம் மார்ச் மாதத்தோடு முடிவுக்கு வருகிறது.
ஆகவே பக்தர்களின் நலனுக்காக யெஸ் வங்கியில் வைப்பு நிதியாக உள்ள 545 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி வெளியிட அனுமதிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.