வீட்டில் தேசிய கொடி ஏற்றும்போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்!

வீட்டில் தேசிய கொடி ஏற்றும்போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்!
வீட்டில் தேசிய கொடி ஏற்றும்போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்!
Published on

இந்தியாவில் 75வது சுதந்திர தினவிழா வரவிருப்பதையொட்டி, மத்திய அரசு சார்பிலும் `ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி’ (Har Ghar Tiranga) என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை பறக்கவிடவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் மூவர்ண கொடியுடன் குடிமக்களின் உறவு ஆழமடையும் என்றும் இது குடிமக்கள் மத்தியில் தேசபக்தி உணர்வை மேலும் வலுப்படுத்தும் என்றும் அரசு கூறுகிறது.

பிரதமரின் மோடியின் வலியுறுத்தலின்பேரில் நீங்கள் உங்களுடைய வீட்டில் கொடியேற்றப்போகின்றீர்கள் எனில், உங்களுக்காகத்தான் இக்கட்டுரை. இதில் தேசியக்கொடியை எப்படி பறக்கவிடலாம், தேசியக்கொடியை பறக்கவிட நேரம் காலம் ஏதும் உள்ளதா, வீட்டில் தேசியக்கொடியை பறக்க விடுகையில் நீங்கள் செய்ய வேண்டியது என்னென்ன - செய்யக்கூடாதது என்ன என்பது உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக இருக்கும். ஆக, தேசியக் கொடியை பறக்க விடும் முன், இத்தகவல்களை அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

(இந்தியாவில் தேசிய கொடியை பயன்படுத்த - காட்சிப்படுத்த - பறக்கவிட - கடைப்பிடிக்க, `இந்தியாவின் கொடி குறித்த சட்டம் 2002' மற்றும் `தேசத்தின் கௌரவத்தை இழிவுபடுத்தல் தடுப்புச் சட்டம் 1971' ஆகிய சட்டங்கள் வழக்கத்தில் உள்ளன. இந்த சட்டவிதிகளின்படி நமக்கு தெரியவரும் சில முக்கிய விவரங்கள்தான் இத்தொகுப்பு)

* தேசியக்கொடியை தயாரிக்க எந்தப் பொருளை பயன்படுத்த வேண்டும்?

இந்தியாவின் கொடி குறித்த சட்டம் 2002-ல் திருத்தம் செய்து பிறப்பிக்கப்பட்ட 2021 டிசம்பர் 30 தேதியிட்ட உத்தரவை காண்க. பாலிஸ்டர் அல்லது விசைத்தறி துணியால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடி அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது கைத்தறி, விசைத்தறி, பருத்தி, பாலிஸ்டர், கம்பளி, பட்டு, காதி துணியால் தேசியக்கொடி தயாரிக்கப்பட்டிருக்கலாம்.

(தேசியக் கொடி தொடா்பான விதிமுறைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் 2022 ஜூலையில் (கடந்த மாதம்)தான் திருத்தம் மேற்கொண்டிருந்தது. இதுகுறித்து அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகளுக்கு உள்துறைச் செயலா் அஜய் பல்லா கடந்த மாதம் கடிதம் எழுதியிருந்தார். அதில் அவர், `கைகளால் நூற்கப்பட்ட தேசியக் கொடி மட்டுமன்றி இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட கொடிகளையும் பயன்படுத்தலாம். பருத்தி, பாலியஸ்டா், கம்பளி, காதி பட்டு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட கொடிகளாக அவை இருக்கலாம். இதற்குரிய விதிமுறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ எனக் குறிப்பிட்டிருந்தார். அக்கடிதம் வழியாக, தேசிய கொடி தயாரிப்பில் அரசின் இந்த அறிவுரையை மட்டும் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அறியும்படி செய்யுமாறு அவர் அறிவுறுத்தியிருந்தார்)

* தேசியக்கொடியின் அளவு மற்றும் விகிதம்:

இந்தியாவின் கொடி குறித்த சட்டத்தின் பத்தி 1.3 மற்றும் 1.4-ன்படி தேசியக்கொடி செவ்வக வடிவில் இருக்க வேண்டும். இந்தக் கொடி எந்த அளவினதாகவும் இருக்கலாம். ஆனால், தேசியக் கொடியின் நீளம் உயரம் (அகலம்) விகிதம் 3:2 என்பதாக இருக்க வேண்டும்.

* வீட்டில் அல்லது பொது இடத்தில் தேசியக் கொடி பறக்கவிடுபவர்கள், எந்த நேரத்திற்கும் அதை பறக்கவிடலாம்? நேர அளவுகோல் பற்றிய விவரங்கள்:

நேர வரைமுறை இல்லை. பொது இடத்தில் அல்லது பொதுமக்களில் ஒருவரின் வீட்டில் காட்சிப்படுத்தப்படும் கொடி இரவிலும், பகலிலும் பறக்கவிடப்படலாம் என்பதே சட்டம் சொல்லும் விஷயம்.

(கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் கொண்டு வரப்பட்ட தேசியக் கொடி தொடா்பான விதிமுறைகளில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தில்தான் இதுவும் இருந்தது. இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், `இந்திய தேசியக் கொடி ஏற்றப்படுதல், பயன்பாடு ஆகியவை கடந்த 2002-ஆம் ஆண்டின் இந்திய தேசியக் கொடி சட்டம் மற்றும் 1977-ஆம் ஆண்டின் தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.தேசியக் கொடியை பொதுமக்களின் வீட்டில் வெளிப்படையாக காட்சிப்படுத்தவும், அதனை பகல் மட்டுமன்றி இரவிலும் பறக்கவிடவும் அனுமதிக்கும் வகையில் இந்திய தேசியக் கொடி சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்று குறிப்பிட்டிருந்தார். முந்தைய விதிமுறைகளின்படி, தேசியக் கொடியானது சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை பறக்கவிட அனுமதி இருந்தது. இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட மற்றும் பாலியஸ்டா் கொடிகள் அனுமதிக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது)

* வீட்டில் தேசியக் கொடியை காட்சிப்படுத்தும் போது மனதில் கொள்ள வேண்டியது என்ன?

தேசியக்கொடி காட்சிப்படுத்தப்படும் போது அது கௌரவமான நிலையையும், மதிப்புக்குரிய இடத்தையும் பெற்றிருக்க வேண்டும். கிழிந்த அல்லது கசங்கிய தேசியக்கொடியை காட்சிப்படுத்தக் கூடாது.

* தேசியக்கொடியை எப்படியெல்லாம் காட்சிப்படுத்தக்கூடாது / பறக்கவிடக்கூடாது?

தேசியக்கொடி தலைகீழான நிலையில் காட்சிப்படுத்தப்படக் கூடாது; அதாவது காவி நிறப்பட்டை அடிப்பகுதியில் இருக்கக் கூடாது. கிழிந்த அல்லது கசங்கிய தேசியக் கொடி காட்சிப்படுத்தப்படக் கூடாது. எந்தவொரு நபருக்கும், பொருளுக்கும் தாழ்வானதாக தேசியக்கொடி இருக்கக்கூடாது. தேசியக் கொடிக்கு உயரமானதாக அல்லது மேலே அல்லது பக்கத்தில் இணையாக வேறு எந்த கொடியோ அல்லது கொடி போன்ற பொருளோ இடம்பெறக் கூடாது. தேசியக்கொடி பறக்கும் கொடி கம்பத்திற்கு மேல் பூக்கள் அல்லது மாலைகள் அல்லது அடையாள சின்னங்கள் உள்ளிட்ட எந்தப் பொருளும் பொருத்தப்படக்கூடாது.

தேசியக் கொடியை மாலையாகவோ, பூங்கொத்தாகவோ, அழகுபடுத்திய பொருளாகவோ அல்லது எந்தவகையான அலங்காரத்திற்கோ பயன்படுத்தக் கூடாது. தேசியக் கொடி தரையில் விழவோ, தண்ணீரில் மிதக்கவோ விடக்கூடாது. தேசியக் கொடி எந்தவிதத்திலும் கிழியும் வகையில் காட்சிப்படுத்தப்படக் கூடாது.

தேசியக் கொடி பறக்கவிடப்படும் கம்பத்தின் உச்சியில் ஒரே சமயத்தில் மற்ற கொடி அல்லது கொடிகள் பறக்கவிடப்படக் கூடாது. உரையாளரின் மேசை மீது விரிப்பாகவோ, உரையாளரின் மேடை மீதோ தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது. அலங்கார ஆடையின் பகுதியாக அல்லது சீருடையாக அல்லது எந்தவொரு நபரும் இடுப்புக்கு கீழே அணியும் துணியாக தேசியக்கொடி பயன்படுத்தப்படக் கூடாது; மெத்தைகள், கைக்குட்டைகள், நாப்கின்கள், உள்ளாடைகள் அல்லது மற்ற ஆடைகளில் அச்சிட்டோ அல்லது பின்னலிட்டோ தேசியக்கொடி வடிவத்தை பயன்படுத்தக் கூடாது.

தனியார் இறுதிச்சடங்குகள் உட்பட எந்த நிலையிலும் தேசியக்கொடியை தொங்கவிடக் கூடாது. அலங்கார ஆடையின் பகுதியாக அல்லது சீருடையாக அல்லது எந்தவொரு நபரும் இடுப்புக்கு கீழே அணியும் துணியாக தேசியக்கொடி பயன்படுத்தப்படக் கூடாது. தேசியக் கொடியின் மீது எழுத்துக்கள் எதையும் பதிவு செய்யக் கூடாது. பொருள்களை மடிக்கவோ, வாங்கவோ அல்லது வழங்கவோ தேசியக்கொடியை பயன்படுத்தக் கூடாது. எந்தவொரு வாகனத்தின் ஓரப்பகுதி, பின்பகுதி, மேற்பகுதி ஆகியவற்றை மூடுவதற்கு தேசியக்கொடியை பயன்படுத்தக் கூடாது.

* தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கப்பட வேண்டுமா?

இந்திய அரசின் உத்தரவு இல்லாத தருணங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கப்படக்கூடாது.

* கார்களில் தேசியக் கொடியை பறக்க விடப்படலாமா?

குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள், இந்திய தூதரகங்களின் தலைவர்கள், பிரதமர், மத்திய அமைச்சர்கள், இணையமைச்சர்கள் மத்திய துணை அமைச்சர்கள், மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர், மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை தலைவர், மக்களவைத் துணை சபாநாயகர், மாநிலங்களில் உள்ள சட்ட மேலவைகளின் தலைவர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற சபாநாயகர்கள், மாநிலங்களில் உள்ள சட்டமேலவையின் துணைத் தலைவர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற துணை சபாநாயகர்கள், இந்திய தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் மட்டுமே மோட்டார் கார்களில் தேசிய கொடியை பறக்கவிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

* பிற நாடுகளின் கொடிகள் உடன் இந்திய தேசிய கொடியை எவ்வாறு காட்சிப்படுத்துவது?

இந்திய கொடி குறியீட்டின் 3.32 ஆம் பத்தியின்படி, இதர நாட்டு கொடிகளுடன் இந்திய தேசிய கொடி நேர் வரிசையில் காட்சிப்படுத்தப்படும் போது நம் நாட்டுக் கொடி வலது புற ஓரத்தில் இடம் பெற வேண்டும். இதர நாடுகளில் கொடிகள் ஆங்கிலத்தில் அந்நாடுகளின் அகர வரிசைப்படி இடம் பெற வேண்டும். மூடிய வட்ட வடிவமைப்பில் கொடிகள் பறந்தால், மூவர்ண கொடி முதலிலும், அதைத் தொடர்ந்து கடிகாரச் சுற்று வரிசையில் இதர கொடிகளும் இருக்க வேண்டும். கொடிக்கம்பம் பெருக்கல் குறி போன்ற அமைப்பில் மற்றொரு கொடியுடன் சுவற்றில் இடம்பெற்றிருந்தால், இந்திய தேசிய கொடி வலதுபுறமும், அதன் கம்பம் மற்ற நாட்டு கொடி கம்பத்திற்கு முன்பாகவும் இருக்க வேண்டும். மற்ற நாட்டுக் கொடிகளுடன் நம் தேசியக்கொடி பறந்தால் அனைத்து கொடிக் கம்பங்களும் ஒரே அளவில் இருக்க வேண்டும்.

* தேசியக்கொடியை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும்?

இந்திய கொடி குறியீட்டின் 2.2 பத்தியில் குறிப்பிட்டுள்ளவாறு, தேசியக்கொடியின் கண்ணியத்தை கருத்தில் கொண்டு அதை எரித்தோ, அல்லது வேறு வழியிலோ தனிமையில் அப்புறப்படுத்தப்பட வேண்டும். காகித கொடி பொதுமக்களால் அசைக்கப்பட்ட பிறகு அவற்றை தரையில் போடக்கூடாது. தேசியக்கொடியின் கண்ணியத்தைக் காப்பாற்றும் வகையில் தனிமையில் அவை அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com