2019 ஜூலை முதல் கார்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை ரிவர்ஸ் பார்க்கிங் அலர்ட் வசதியுடன் தயாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பேருந்து உள்ளிட்ட வாகனங்களை ரிவர்ஸ் எடுக்கும்போது டிரைவர்கள் சில நேரம் பின்னால் இருப்பவர்களை கவனிக்காமல் ரிவர்ஸ் எடுத்து விடுகின்றனர். இதனால் விபத்து ஏற்பட்டு சில நேரங்களில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பும் நிகழ்ந்து விடுகின்றன. இதேபோன்று சமீபத்தில் டெல்லியில் ஒரு பள்ளி மாணவி உள்பட இரண்டு பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் 2019 ஜூலை முதல் தயாரிக்கப்படும் கார்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை ரிவர்ஸ் பார்க்கிங் அலர்ட் வசதியுடன் தயாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்துறை இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதே விதிகள் அனைத்து வகையான ட்ரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு 2020 ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது. விபத்துகளை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த விதிகள் டிராக்ட்டர்களுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலர்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருந்தால் வண்டிகளை ரிவர்ஸ் எடுக்கும்போது, யாராவது குறிப்பிட்ட தூரத்தில் பின்னால் இருந்தால் அதுவாகவே ஒலி எழுப்பிவிடும். இதற்கேற்ப சென்சார் பொருத்தப்பட்டிருக்கும். இதன்மூலம் டிரைவார் உஷாராகி வண்டியை மேலும் பின்எடுப்பதை நிறுத்தி விடலாம். இதன்மூலம் விபத்துகள் தவிர்க்கப்படும் என கூறப்பட்டுள்ளது.