ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் பங்குபெறும் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று காலை நடைபெற உள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்து விவாதிக்கவும் விவரங்களை தெரிவிக்கவும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வெளியுறவு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் அரசு சார்பில் பங்கேற்க உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு, தலிபான்களின் எழுச்சியால் எதிர்கொள்ள வாய்ப்புள்ள பிரச்னைகள், மீட்பு பணிகள் குறித்து இக்கூட்டத்தில் வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் சிங்ளா விளக்கி கூற உள்ளார். இதன் பின் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு அவர் பதில் அளிப்பார். இக்கூட்டத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா, டிஆர் பாலு, விடுதலைச் சிறத்தைகள் கட்சி சார்பில் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.