"ராஜசேகரன் To நான் கடவுள்".. யார் இந்த நித்தியானந்தா? எங்கு இருக்கிறார்? கைலாசா அறிவிப்பு என்னஆனது?

ஒரு கட்டத்தில் பலராலும் கடவுளாகவே நம்பப்பட்டு பிறகு மோசடி மன்னனாக விமர்சிக்கப்பட்டு நாட்டை விட்டே ஓடிய நபர், தற்போது தனி நாட்டையே கட்டி எழுப்பி அதற்கு வருமாறு அழைக்கிறார் என்றால் அந்த பேருக்குச் சொந்தக்காரர் யாராக இருக்க முடியும். நித்தியானந்தாவேதான்
நித்தியானந்தா
நித்தியானந்தாPT
Published on

ராஜசேகரன் - நான் கடவுள்

ஆன்மீக பயணத்தில் வேறு யாரும் அடைந்திட முடியாத அளவுக்கு மிகக்குறுகிய காலத்திலேயே உச்சம் தொட்டு, ஒரே வீடியோவால் ஒட்டுமொத்த சாம்ராஜ்யமும் சரிந்தபிறகு மீண்டும் தன்னை கடவுளாகவே கூறி வரும் நித்யானந்தா, தனது கைலாசா நாட்டிற்கு யாரும் வரலாம் என்று அழைப்புவிட்டுள்ளார். கைலாசா என்று அவர் கூறிக்கொள்ளும் இடங்கள் 7 வெவ்வேறு இடங்களில் பல நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு இருப்பதாக அவர் அறிவித்துள்ள நிலையில், இதுவரை அவர் கடந்து வந்த பாதையை சற்றே திரும்பிப்பார்க்க முயல்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு.

எந்த ஊரைச் சேர்ந்தவர்?

சிவனும் நான்தான் விஷ்ணுவும் நான்தான் என்று தன்னைத்தானே கடவுளாக அறிவித்துக்கொள்ளும் நித்தியானந்தா, திருவண்ணாமலையில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் 1978ம் ஆண்டு பிறந்தவர். பரமஹம்ச நித்தியாந்தா என்று அழைக்கப்படும் இவரது உண்மையான பெயர் ராஜசேகரன். சிறுவயதில் இருந்தே ஆன்மீக நாட்டம் அதிகம் கொண்டிருந்த நித்தியானந்தா, தன்னுடைய 12வது வயதில் அருணாச்சல மலையின் அடிவாரத்தில் தியானம் செய்தபோது, மனித உடலைத் தாண்டிய ஒரு பேரானந்தத்தை அடைந்ததாக குறிப்பிடுகிறார்.

NGMPC22 - 158

தொடர்ச்சியான தனது ஆன்மீக தேடல்களால் 17வது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய நித்தியானந்தா, இந்தியாவில் பல முக்கிய ஆன்மீக தளங்களுக்கு சென்று வந்தார். மகா அவதாரம் பாபாஜி தனக்கு காட்சியளித்ததாகவும், அவர்தான் தனக்கு பரமஹம்ச நித்தியானந்தா என்று பெயரை சூட்டியதாகவும் கூறிக்கொண்ட நித்தியானந்த 2000ங்களில் பிரபலமாகத் தொடங்கினார். படிப்படியாக சாமியார் என்ற பிம்பம் விரிவாக, நித்தியானந்தா ஆசீர்வதித்தால் உடல்நலம் பெறுவதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, செய்தித்தாள்கள், வார இதழ்களில் பேசுபொருளானார்.

நித்தியானந்தா
மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை அட்டூழியம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 9 மீனவர்கள் கைது

ஆன்மீக பயணத்தின் தொடக்கம்!

ஆன்மீக குரு ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர் உள்ளிட்டோர்தான் தனது மானசீக குருக்கள் என்று கூறியவர், நாளடைவில் தென்னிந்தியாவில் பிரபலமான சாமியாராகவும் மாறினார். நூற்றுக்கணக்கில் தொடங்கிய பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வருகை நாளடைவில் ஆயிரக்கணக்கில் அதிகரித்த நிலையில், 2003ம் ஆண்டு பெங்களூரு அருகேவுள்ள பிடதி என்ற இடத்தில் ஆசிரமத்தை அமைத்தார் நித்தியானந்தா.

நேரில் சென்று ஆசிர்வாதம் பெறுவதில் தொடங்கி, வீட்டில் போட்டோவை வைத்து வணங்குவது வரை உயர்ந்தது நித்தியாந்தாவின் புகழ். தன்னை தேடி வருவோருக்கு சிறப்பு தியானத்தை கற்றுத்தருவதாக அவர் தரப்பு கூறினாலும், சொர்ப்ப ரூபாயில் தொடங்கிய கட்டணம் நாளடைவில் லட்சக்கணக்கில் உயர்ந்ததாக கூறப்படுகிறது. தென்னிந்தியாவில் விரிவடைந்த நித்தியானந்தாவின் ஆதிக்கம் உலகம் முழுவதும் பரவ அடுத்த ஓரிரு ஆண்டுகளில் சுமார் 30 நாடுகளில் 1200 ஆசிரமங்கள் என்று விரிவடைந்தது.

இடியை இறக்கிய ஒற்றை வீடியோ!

சிக்கலாக சமஸ்கிரதத்தில் எல்லாம் பேசாமல், எளிதான தமிழில் பேச்சு வழக்கில் நகைச்சுவையாக பேசுவதும், இயல்பான எடுத்துக்காட்டுகளை முன்வைப்பதும் நித்தியானந்தாவை அனைவரிடமும் கொண்டு சேர்க்க, பழமை வாய்ந்த ஆதீனங்களையே விஞ்சும் அளவுக்கு நூற்றுக்கணக்கான கோடிகளில் உயர்ந்தது நித்தியானந்தாவின் சாம்ராஜ்யம். நித்தியானந்தாதான் அடுத்த அவதாரம் என்ற அளவுக்கு பேசப்பட்ட காலத்தில்தான் அவரின் ஆன்மீக வாழ்க்கையில் பேரிடியை இறக்கியது ஒற்றை வீடியோ. தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொலைக்காட்சி 2010ம் ஆண்டு ஒரு வீடியோவை வெளியிட்டது.

இதில் தன்னை பிரம்மச்சாரியாக முன்னிருத்திக்கொள்ளும் நித்தியானந்தா திரைப்பட நடிகை ஒருவருடன் தனி அறையில் இருப்பது போன்ற காட்சிகள் அடங்கியிருந்தன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஒரே நாளில் தலைகீழாக மாறியது நித்தியானந்தாவின் ஆன்மீக பயணம். இதனால் நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் வெகுண்டெழுந்த நிலையில், வழக்கும் பதியப்பட்டது. ஆனால், வீடியோவில் இருப்பது தான் இல்லை. என்னால் யாருடனும் பாலியல் உறவு வைத்துக்கொள்ள முடியாது என்று நித்தியானந்தா மறுத்தார். வீடியோவை ஆய்வு செய்த தடயவியல் நிபுணர்கள், வீடியோவில் இருப்பது அவர்தான் என்று உறுதிப்படுத்திய நிலையில், உடல் பரிசோதனைக்குப் பிறகு நித்தியானந்தா சொன்னது போல அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என்பதும் தெரியவந்தது.

நித்தியானந்தா
பட்ஜெட் 2024-25 | 9 துறைகளுக்கு முன்னுரிமை... நிதியமைச்சர் உரையின் முக்கியம்சங்கள்!

மதுரை ஆதினமாக பொறுப்பு!

தொடர்ச்சியாக, பாலியல் குற்றச்சாட்டுகள், வன்கொடுமை வழக்குகளுக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட நித்தியானந்தா ஜாமீனில் வெளிவந்த நிலையில், 2012ம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் 293வது ஆதினமாக அறிவிக்கட்டார். அருணகிரி நாதரே நித்தியானந்தாவை ஆதினமாக தேர்வு செய்த நிலையில், ஆன்மீக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பாலியல் புகாரில் சிக்கியவரை எப்படி ஆதினமாக தேர்வு செய்வது என்று எதிர்ப்புக்குரல் எழுந்தது. தொடர்ந்து, அவரிடம் இருந்த ஆதினம் பொறுப்பை திரும்பப்பெற்றார் அருணகிரி நாதர். தன்னை நித்தியானந்தா ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். அதுதொடர்ந்து, மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் செல்ல அவருக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, ஒரு சாதாரண குடினமகான கோயிலுக்குச் செல்லலாம் என்று தீர்ப்பு வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

பாலியல் வழக்குகள் ஒருபுறம் இருக்க, 2014ம் ஆண்டு பெங்களூரு ஆசிரமத்தில் சங்கீதா என்பவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஆசிரமத்தின் தரப்பில் மாரடைப்பால் சங்கீதா உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், சந்தேகம் இருப்பதாக கூறி சிபிஐக்கு வழக்கை மாற்றக்கோரினார் சங்கீதாவின் தாய். வழக்கு விசாரணைக்குப்பிறகு சிபிஐக்கு மாற்றப்பட்டது. பாலியல் வழக்கு, பெண்களை அடைத்துவைத்து கொடுமைப்படுத்துவது என்று தொடங்கி, சாரா லாண்ட்ரியின் குற்றச்சாட்டு வரை அவர் மீது வழக்குகள் பதியப்பட்ட நிலையில், நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டதாக 2019ம் ஆண்டு அறிவித்தது வெளியுறவுத்துறை அமைச்சகம்.

நித்தியானந்தா
மத்திய பட்ஜெட் 2024 - 2025 | பீகார், ஆந்திராவுக்கு அடித்தது ஜாக்பாட்... வெளியான அதிரடி அறிவிப்புகள்!

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நித்தியானந்தா!

இதற்கிடையேதான், தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பிக்க 2019ம் ஆண்டு வெளிநாட்டுக்கு நித்தியானந்தா தப்பி ஓடியதாக தகவல் வெளியானது. அடுத்த ஒரு சில மாதங்களிலேயே யூடியூப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்கள் மூலமாக எண்ட்ரி கொடுத்த நித்தியானந்தா, கைலாசா என்ற நாட்டை கட்டமைத்துவிட்டதாகவும், தனியாக கொடி, ரூபாய், பாஸ்போர்ட் என்று தனி அரசையே நடத்தி வருவதாக மார்தட்டிக்கொண்டு வருகிறார். குரு பூர்ணிமா அன்று கைலாசா நாடு எங்கு இருக்கிறது என்பதை அறிவிப்பேன் என்றவர், அது எப்படி இருக்கும் என்பதை அறிவித்ததோடு நிறுத்திக்கொண்டுள்ளார்.

NGMPC22 - 158

இதுவரை நித்தியானந்தா மீது புகார் கொடுத்தவர்கள், குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் என பெரும்பாலானோர் அவரது சீடர்களே. ஆனாலும், இமயமே இடிந்து விழுந்தாலும், யார் என்ன விமர்சனத்தை முன்வைத்தாலும் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் நித்தியானந்தா அது எதையுமே பொருட்படுத்தாமல் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் நித்தியானந்தா.

எழுத்து: யுவபுருஷ்

நித்தியானந்தா
பட்ஜெட் 2024-25 : ஆந்திரப்பிரதேச வளர்ச்சி திட்டங்கள் To இளைஞர்களுக்கான 5 சிறப்பு திட்டங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com