சீனாவின் அலிபாபா குழுமத்தின் துணை நிறுவனமான யூ.சி வெப் இந்திய அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களை அண்மை காலமாக ஆட்குறைப்பு நடவடிக்கையின் மூலம் குறைத்து வருகிறது அந்நிறுவனம்.
இந்திய அரசு கடந்த மாதம் சுமார் 59 சீன மொபைல் அப்ளிகேஷன்களை பயன்படுத்த தடை விதித்ததே இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு இந்த செயலிகள் அச்சுறுத்தலாக இருப்பதால் இதன் பயன்பாட்டை தடை செய்வதாக இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது.
இந்த நடவடிக்கையை சீனா மீது இந்தியா தொடுத்த ‘டிஜிட்டல் ஸ்ட்ரைக்’ எனவும் சர்வதேச பத்திரிகைகள் சொல்லியிருந்தன. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் தனது இயக்கத்தை துவக்கிய யூ.சி வெப் நிறுவனம் தனது ஊழியர்களிடம் நேற்றைய தினம் (ஜூலை 15) கடிதத்தின் மூலமாக ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதை தெரிவித்துள்ளது. அதனை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது.
‘யூ.சி வெப் மற்றும் வி மேட் அப்ளிகேஷனை பயன்படுத்த இந்திய அரசாங்கம் தடை செய்ததைத் தொடர்ந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறோம்’ என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் ஆணையை ஏற்று எங்களது சேவையை முழுவதுமாக நிறுத்தி கொண்டுள்ளோம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் தங்களது நிறுவனத்தின் இயக்கத்தை நிரந்தரமாக நிறுத்துகிறதா என்பதை யூ.சி வெப் உறுதி செய்யவில்லை.
அந்நிறுவனத்தின் நடவடிக்கையால் நேரடியாக பணியில் இயங்கிய நூறு ஊழியர்கள் பணியை இழந்துள்ளனர். மாதத்திற்கு சுமார் 130 மில்லியன் பயனர்கள் இந்தியாவில் மட்டும் யூ.சி வெப் அப்ளிகேஷனை பயன்படுத்தி வந்தனர். இந்த விவகாரத்தில் அலிபாபா நிறுவனம் எந்தவொரு தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவின் மற்றொரு ஈ காமர்ஸ் நிறுவனமான கிளப் பேக்டரி தடை நீங்கும் வரையில் தங்களது சேவையைத் தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளது.