மழை.. நெட்வொர்க் இல்லை - 8 மணி நேரத்திற்குப் பிறகே அதிகாரிகளுக்கு தெரிந்த கேரள நிலச்சரிவு

மழை.. நெட்வொர்க் இல்லை - 8 மணி நேரத்திற்குப் பிறகே அதிகாரிகளுக்கு தெரிந்த கேரள நிலச்சரிவு
மழை.. நெட்வொர்க் இல்லை - 8 மணி நேரத்திற்குப் பிறகே அதிகாரிகளுக்கு தெரிந்த கேரள நிலச்சரிவு
Published on

கடந்த வாரம் கேரளாவில் பெய்த கனமழையால் இடுக்கி மாவட்டத்தின் பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இந்த விபத்து குறித்த தகவல் சுமார் 8 மணி நேரத்திற்கு பிறகே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சியான செய்தி தற்போது வெளியாகியுள்ளது. 

அந்த தேயிலைத் தோட்ட நிறுவனத்தின் பெட்டிமுடி பிரிவின் மேற்பார்வையாளர் செந்தில்குமார் தெரிவித்தது..

‘நிலச்சரிவு ஏற்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தான் எனக்கு தகவல் கிடைத்தது. ஆகஸ்ட் 4 முதலே கடுமையாக இங்கு மழை பெய்து கொண்டிருந்தது. வழக்கமாக தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் இரவு 8.30 மணிக்கெல்லாம் தூங்க சென்றுவிடுவார்கள். 

அன்று இரவு 10.45 மணியளவில் தோட்டத்தில் வேலை பார்த்த சில இளைஞர்கள் அவர்களது வீடுகளுக்கு அருகே வெள்ளம் பெருக்கெடுத்து வருவதை கவனித்துள்ளார். அதை கீழேயுள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்களிடம் சொல்லி அவர்களை எச்சரிக்க விரைந்தனர். ஆனால் சில நொடிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு தூங்கிக் கொண்டிருந்த சுமார் 80க்கும் மேற்பட்டோர் வசித்த குடியிருப்பு மண்ணுக்குள் புதைந்துள்ளது. 

சாலைகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி இருந்ததாலும், சில இடங்களில் பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்து கிடந்ததாலும் அவர்கள் என்னிடம் வந்து தகவல் சொல்ல ஒரு மணி நேரம் பிடித்தது. 

நான் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு தெரிவிக்க முயன்ற போது மழையினால் மொபைல் நெட்வொர்க் செயலிழந்து இருந்ததால் முடியாமல் போனது.

உதவிக்காக மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள ராஜமலை உதவி மேலாளரின் வீட்டிற்கு நானும், சிலரும் நடந்தே சென்றோம். மழை மற்றும் வெள்ளத்தை கடந்தபடி அங்கு செல்ல சுமார் நான்கு மணி நேரம் பிடித்தது. அங்கும் மொபைல் நெட்வொர்க் இல்லாததால் ஒரு பைக்கை எடுத்துக்கொண்டு மலையின் உச்சிக்கு சென்று காலை 7 மணியளவில் தகவலை தெரிவித்தோம். அதன் பின்னர் 11 மணியளவில் தான் மீட்பு பணிகள் ஆரம்பமானது’ என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com