குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கான போராட்டத்தில் இருந்து மக்கள் விலகி இருக்க வேண்டும் என பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கேட்டுக்கொண்டார்.
சில வாரங்கள் முன்பாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. உடனே டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கினர். இவர்களுக்கு ஆதரவாக, டிசம்பர் 15 ஆம் தேதியன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். அப்போது வன்முறை வெடித்தது. இதனை அடுத்து நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
சில தினங்கள் முன்பு தமிழகத்திலும் திமுக கூட்டணிக் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற பேரணியில், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனால் சென்னையில் போக்குவரத்து முடங்கியது.
இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவோ எதிராகவோ நிலைபாடு கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அதற்கு போராட்டம் நடத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார். வாகனம் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தக் கூடாது என்றும் தங்கள் தரப்பை, சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி தீர்க்க வேண்டும் என அக்ஷய் குமார் வலியுறுத்தியுள்ளார். டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின் வீடியோ பதிவுக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவாக பதிவிட்ட அக்ஷய் குமாருக்கு ட்விட்டரில் எதிர்ப்பு அலைகளை எழுந்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.