வீரமரணமடைந்த ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு உதவுவதற்காக இணையதளம் அல்லது மொபைல் அப்ளிகேஷனை உருவாக்க இருப்பதாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் 68ஆவது குடியரசுதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசத்துக்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று ட்விட்டர் வீடியோ பதிவு மூலம் அக்ஷய் குமார் வலியுறுத்தியுள்ளார். மேலும், அந்த இணையதளத்தில் வீரமரணமடைந்த ராணுவ வீரரின் பெயர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்கு விபரங்கள் இடம்பெற்றிருக்கும். அவர்களுக்கு நீங்கள் உதவ விரும்பினால், அந்த வங்கிக் கணக்கில் நேரடியாக பணத்தினை செலுத்த முடியும். வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் பணம் ரூ.15 லட்சம் என்ற அதிகபட்ச அளவினை எட்டும் போது அந்த வங்கிக் கணக்கு குறித்த விபரங்கள் இணையதளத்திலிருந்து நீக்கப்படும். இதன்மூலம் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் நேரடியாக பயன்பெற முடியும் என்று அக்ஷய் குமார் குறிப்பிட்டுள்ளார்.