“கனடா குடியுரிமையால் வாக்களிக்கவில்லையா?” - மௌனத்தை களைத்த அக்ஷய் குமார்

“கனடா குடியுரிமையால் வாக்களிக்கவில்லையா?” - மௌனத்தை களைத்த அக்ஷய் குமார்
“கனடா குடியுரிமையால் வாக்களிக்கவில்லையா?”  - மௌனத்தை களைத்த அக்ஷய் குமார்
Published on

தன்னுடைய குடியுரிமை தொடர்பாக ஏன் இவ்வளவு விமர்சனங்கள் எழுகின்றது என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சமீபத்தில் நேர்காணல் செய்திருந்தார். நேரடியாக அரசியல் சாராத ஒரு நேர்காணலாக அது அமைந்திருந்தது. பத்திரிகையாளர்கள் இருக்கையில் நேர்காணலுக்கு அக்ஷய் குமாரை தேர்வு செய்தது குறித்து கேள்விகள் எழுந்தன. 

அதனையடுத்து, நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அக்ஷய் குமார் வாக்களிக்கவில்லை. அக்ஷய் வாக்களிக்காதது ட்விட்டரில் ட்ரோல் ஆனது. அவர் வாக்களிக்காததற்கு காரணம் அவர் கனடா குடியுரிமை வைத்திருப்பதுதான் என்று பலரும் கூறினார். ஆனால், இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அப்போது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

2017ம் ஆண்டு டைம்ஸ் நவ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அக்ஷய் குமார், தனக்கு கனடா அரசாங்கத்தால் கௌரவ குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதை தெரிவித்து இருந்தார். எனவே, அவர் கனடா குடியுரிமை வைத்திருப்பது உறுதியானது. 2012ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி அக்ஷய் குமாருக்கு கனடா குடியுரிமை பெற்றதற்கான ஆவணங்கள் கிடைத்ததாக தகவல்கள் கூறுகின்றன. அதுவும், விண்ணப்பித்த இரண்டு வாரங்களில் குடியுரிமை கிடைத்ததாக தெரிகிறது.

இந்நிலையில் குடியுரிமை சர்ச்சை குறித்து அக்ஷய் குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “என்னுடைய குடியுரிமை குறித்து ஏன் இவ்வளவு எதிர்மறையான விமர்சனங்கள் எழுகிறது என்று புரியவில்லை. என்னிடம் கனடா பாஸ்போர்ட் இருப்பதை நான் ஒருபோதும், மறைக்கவோ அல்லது மறுக்கவோ இல்லை. அதைப் போலவே கடந்த 7 வருடங்களாக நான் கனடா சென்றதில்லை என்பதும் உண்மையே. நான் இந்தியாவில்தான் பணியாற்றுகிறேன். இந்தியாவில்தான் வரி செலுத்துகிறேன்.

யாருக்கு என்னுடைய நாட்டுப் பற்றினை நிரூபிக்க வேண்டிய தேவையில்லை. தேவையில்லாமல் என்னுடைய குரியுரிமை குறித்து விமர்சனங்கள் எழுவது வருத்தமாக உள்ளது. இது தனிப்பட்ட, சட்ட ரீதியான, அரசியலற்ற ஒரு விஷயம். இந்தியாவை வலிமையாக்க என்னால் ஆன சிறிய பணியை தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com