தீபாவளி பண்டிகைக்காக உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கங்கை நதிக்கரை, ராமர் கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள கோயில்கள், மடங்களில் சுமார் 23 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. தீப உற்சவ நிகழ்வுக்குப் பின் அணைந்த அகல் விளக்குகளில் இருந்து எண்ணெய் சேகரிக்கும் பணியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஈடுபட்டனர். அப்போது அவர்களை அங்கு பணியில் இருந்த காவலர்கள் தடுத்துள்ளனர்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது. ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் எண்ணெய் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டதை காவலர்கள் தடுக்கும் வீடியோடிவை கண்டு பலரும் தங்களது ஆதங்கத்தையும், கவலையையும் தெரிவித்தனர்.
இதுதொடர்பான வீடியோவை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், 'தெய்வீகத்துக்கு மத்தியில் ஏழ்மை' என பதிவிட்டுள்ளார். 'ஏழ்மை நிலையால், ஒருவர் எரிந்த விளக்குகளில் இருந்து எண்ணெய் சேகரிக்க வைக்கும் நிலை இருக்கும்போது, கொண்டாட்டத்தின் ஒளி மங்கிவிடும்' என குறிப்பிட்டுள்ளார்.
'இதுபோன்ற ஒரு விழா வரவேண்டும், அதில் கிடைக்கும் வெளிச்சத்தால் ஏழையின் வீடும் ஒளிர வேண்டும் என்பதுதான் தங்களின் விருப்பம்' என அகிலேஷ் யாதவ் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.