குமாரசாமி பதவியேற்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் வஜுபாய் அழைத்தார். காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு முதலில் அழைப்பு விடுக்கவில்லை. பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவிற்கு 15 நாட்கள் ஆளுநர் அவகாசம் அளித்த நிலையில், உச்சநீதிமன்றம் அதனை குறைத்தது. இதனையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நாளில் தனது முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். இதனையடுத்து, குமாராசாமிக்கு ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். நாளை மறுதினம்(புதன்கிழமை) குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ்-மஜத ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அகில பாரத இந்து மகா சபா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், ‘தேர்தலுக்கு பிந்தையை கூட்டணி என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது’ என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.