கேரளாவைச் சேர்ந்த முன்னாள் முதல்வரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி, நேற்று (ஏப்ரல் 6) பாஜகவில் இணைந்தார். பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்டிருந்த ஆவணப்படத்துக்கு ஆதரவாக, கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி, அனில் அந்தோணி கருத்து தெரிவித்திருந்தார். இது, கேரளத்தில் மட்டுமின்றி, இந்திய காங்கிரஸிலும் அதிர்வலைகளை எழுப்பியது. இதைத் தொடர்ந்து காங்கிரஸிலிருந்தும் விலகுவதாக, மறுநாளே (ஜனவரி 25) அறிவித்த நிலையில், நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், வி.முரளீதரன், கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் இணைந்தது குறித்து அனில் அந்தோணி, “பாஜகவில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். காங்கிரஸ் தொண்டர்கள் ஒரு குடும்பத்திற்காக உழைப்பதுதான் அவர்களுடைய கடமை என்று நம்புகிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை நாட்டிற்காக உழைப்பதுதான் என்னுடைய கடமை என நினைக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் கேரள மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதுமுள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அனில் அந்தோணி பாஜகவில் இணைந்தது குறித்துப் பேசிய ஏ.கே.அந்தோணி, “பாஜகவில் சேர்ந்திருக்கும் அனிலின் இந்த முடிவு என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளது. இது முற்றிலும் தவறான நடவடிக்கை. அவரைப்போல, நான் வேறு எந்தக் கட்சிக்கும் மாற மாட்டேன். எனக்கு 82 வயதாகிறது. நான், என் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறேன். என்றாலும், என் கடைசி மூச்சு இருக்கும்வரை காங்கிரஸுடன் மட்டும்தான் இருப்பேன்” என்றார்.
இந்த நிலையில் ஏ.கே.அந்தோணியின் இளைய மகனும், அனில் அந்தோணியின் சகோதரருமான அஜித் அந்தோணி, ”அனில் அந்தோணியை, பாஜக கறிவேப்பிலையைப்போல் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அஜித் அந்தோணி, “அனில், பாஜகவில் இணைந்தது குறித்த எந்த முடிவையும் குடும்பத்தினரிடம் தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக, நேற்று ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்த்தே தெரிந்துகொண்டதுடன் அதிர்ச்சியுற்றோம். அனில் செய்த இந்தச் செயலால், தந்தை (ஏ.கே.அந்தோணி) மிகவும் நொந்துபோயுள்ளார். அவர், வீட்டின் ஒரு மூலையில் மிகுந்த வேதனையுடன் அமர்ந்துள்ளார். அவர், இப்படி அமர்ந்திருப்பதை என் வாழ்நாளில் நான் ஒருநாள்கூடப் பார்த்ததில்லை.
அவர், இந்த விஷயத்தில் அழாமல் இருக்கிறார். அவ்வளவுதான். அனில், பாஜகவில் சேர அவருக்கு ஏதேனும் சொந்த காரணங்கள் இருக்கலாம். இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது. ஆனால், அனில் குறித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போனில் அழைப்பு விடுத்தவண்ணம் உள்ளனர். இது தன்னை மேலும் காயப்படுத்துகிறது. அனிலுக்கு அரசியல் எதிர்காலம் நல்லது என நினைத்தால், அவர் அக்கட்சியில் நீடிக்கலாம். ஆனால் பாஜக, அனிலை கறிவேப்பிலையைப்போல் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.