’’முதல் இந்தியர்’’.. உலக வங்கியின் தலைவராக பொறுப்பேற்றார் அஜய் பங்கா! காத்திருக்கும் சவால்கள் என்ன?

உலக வங்கியின் புதிய தலைவராக பதவியேற்றார் இந்தியரான அஜய் பங்கா.
Ajay Banga
Ajay BangaTwitter
Published on

உலக வங்கியின் தலைவராக இருந்த டேவிட் மால்பஸ் பதவி விலகியதைத் தொடர்ந்து, கடந்த மே 3ஆம் தேதி புதிய தலைவராக அமெரிக்கா வாழ் இந்தியரான அஜய் பங்காவை முன்மொழிவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.

இதையடுத்து உலக வங்கியின் தலைவராக அஜய் பங்காவை உலக வங்கி நிர்வாக இயக்குனர்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.

இந்நிலையில், அஜய் பங்கா இன்று உலக வங்கியின் தலைவராக முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் உலக வங்கியின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை அஜய் பங்கா பெற்றிருக்கிறார்.

Ajay Banga
Ajay Banga

உலக வங்கியின் 14-வது தலைவராக பொறுப்பேற்றுள்ள அஜய் பங்கா, அடுத்த 5 ஆண்டுகளுக்கு அப்பதவியை வகிப்பார். இதுதொடர்பாக உலக வங்கியின் ட்விட்டர் பதிவில், உலக வங்கியின் தலைமையகத்திற்குள் செல்லும் அஜய் பங்காவின் புகைப்படத்தை பகிர்ந்து, “உலக வங்கி குழுமத்தின் புதிய தலைவராக அஜய் பங்காவை வரவேற்க எங்களுடன் இணையுங்கள். நாம் வாழக்கூடிய உலகில் வறுமை இல்லாத உலகத்தை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்று பதிவிடப்பட்டுள்ளது.

63 வயதான அஜய் பங்கா இந்தியாவில் சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர். 2010 முதல் 2021 வரை `மாஸ்டர் கார்டு' நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியில் இருந்தவர். சர்வதேச வர்த்தக சபை, அமெரிக்கன் செஞ்சிலுவைச் சங்கம், கிராஃப்ட் ஃபுட்ஸ் மற்றும் டவ் இன்க் ஆகியவற்றின் உயர் பதவிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். கடந்த 2016ம் ஆண்டில் அஜய் பங்காவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

World Bank
World Bank

கடனில் தவிக்கும் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளின் உடனடி நிதித் தேவைகளை சமாளிப்பது, காலநிலை மாற்றம், சர்வதேச போர் மற்றும் பெருந்தொற்று அபாயங்களை சமாளிப்பது ஆகியவை அஜய் பங்கா முன்னிற்கும் சவால்கள் ஆகும்.

உலக வங்கியின் புதிய தலைவராக பதவியேற்று உள்ள அஜய் பங்காவுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக வங்கியை அஜய் பங்கா திறமையாக நிர்வகிப்பார் என கிறிஸ்டலினா ஜார்ஜீவா புகழ்ந்துள்ளார்.

187 நாடுகளின் குழுமமான உலக வங்கி, சர்வதேச அளவில் வறுமை ஒழிப்பு, பருவநிலை மாறுபாடு, உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றையும் கவனத்தில்கொண்டு செயல்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com