இந்தியாவை குறிவைக்கும் பயங்கரவாதிகள்? - உளவுத்துறை எச்சரிக்கை

இந்தியாவை குறிவைக்கும் பயங்கரவாதிகள்? - உளவுத்துறை எச்சரிக்கை
இந்தியாவை குறிவைக்கும் பயங்கரவாதிகள்? - உளவுத்துறை எச்சரிக்கை
Published on

டெல்லியில் மூன்று முதல் நான்கு பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், திருமலை திருப்பதிக்கும் பயங்கரவாதிகள் குறிவைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு பதிலடியாக, டெல்லியில் தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்த பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயிற்சிப் பெற்ற நான்கு பயங்கரவாதிகள் தலைநகர் டெல்லிக்குள் கடந்த வாரம் ஊடுருவியிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அவர்களில் இரண்டு பேர் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளாக இருக்கக் கூடும் எனவும் தெரியவந்திருக்கிறது.

உளவுத்துறையினர் எச்சரிக்கையை அடுத்து, டெல்லி மாநில சிறப்பு காவல்துறை பிரிவினர், நகரில் உள்ள ஒன்பது இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்துக்கிடமான இருவர் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாகவும், ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நகருக்குள் தாக்குதல் நடத்துவதோடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆகியோருக்கும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் குறி வைத்திருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.

இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்தும் எண்ணத்துடன் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தொடர்ந்து பயங்கரவாதிகளை அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அப்படி இந்தியாவுக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகள் எப்படி தாக்குதல் நடத்த வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என்ற உத்தரவுகளை எல்லைக்கு அப்பால் இருந்தபடி பயங்கரவாத தலைவர் மவுலானா மசூத் அசார் பிறப்பித்து வருவதாகவும் தெரிவிக்கிறார் உளவுத் துறையை சேர்ந்த மூத்த அதிகாரி. இதன் காரணமாக டெல்லி முழுவதும் காவல்துறையினர் உஷார்நிலையில் வைக்கப்பட்டு, முக்கிய இடங்களுக்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதியில் பிரமோற்சவ விழா கோலாகலமாக நடந்து வரும் நிலையில், பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரமோற்சவத்தை முன்னிட்டு, திருமலை திருப்பதியில் திரளான பக்தர்கள் குவிந்துள்ளனர். இன்று முக்கிய நிகழ்வான கருட சேவையை காண நாடு முழுவதும் இருந்து 3 லட்சம் பக்தர்கள் திருமலையியில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், திருமலைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்கும் விடுதி, மலைப் பாதை என அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, முக்கிய இடங்களில் அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com