சென்னையில் இருந்து பிற முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கான விமானக் கட்டணம் கடந்த ஆண்டை விட கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சென்னையில் இருந்து மும்பை, கொல்கத்தா, கொச்சி, ஐதராபாத் மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கான விமான கட்டணம் மிக குறைவாக இருந்தது. ஆனால், எரிபொருள் விலை உயர்வு காரணமாக இந்த ஆண்டு கட்டணம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு சென்னையில் இருந்து மும்பை செல்வதற்கான குறைந்தபட்ச விமானக் கட்டணம் ஆயிரத்து 646 ரூபாயாக இருந்தது. தற்போது இந்தக் கட்டணம் ரூ.2,462 ஆக உயர்ந்துள்ளளது. கொல்கத்தா செல்வதற்கான ஆரம்பக் கட்டத் தொகை கடந்த ஆண்டு ரூ.2,129 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ,3,859 ஆக அதிகரித்துள்ளது.
இதே ரீதியில் தான் பிற உள்ளூர் நகரங்களுக்கு செல்வதற்கான விமானக் கட்டணமும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்தை பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருவது, எரிபொருள் விலையேற்றம் போன்றவை தான் கட்டணம் உயர்ந்ததற்கு முக்கிய காரணியாக இருப்பதாக விமான டிக்கெட் பதிவு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.