இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சில நிறுவனங்களின் விமானங்களில் பயணம்செய்யும் பயணிகளுக்கு, அதன் சேவைகளில் அதிருப்தி நிலவுவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. பணியாளர்களின் அலட்சியமான சேவைகளால் அசெளகரியங்கள் ஏற்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதில் அடிக்கடி ஏர் இந்தியா நிறுவனம் சிக்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நஷ்டத்தில் இயங்கிவந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் 2022 ஜனவரியில் கையகப்படுத்திக் கொண்டது. அதன் பிறகு பயணிகளை கவரும் விதத்தில் விமானத்தின் வண்ணங்களை மாற்றுவது, விமான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, பயணிகளுக்கு சலுகைகள் வழங்குவது என்று இயக்கி வந்தது ஏர் இந்தியா. ஆனாலும் பயணிகளிடமிருந்து பல பிரச்னைகளைச் சம்பாதித்து வந்தது. இப்படியாக சென்றுகொண்டிருந்த அந்நிறுவனம், தனது ஊழியர்கள் 180 பேரை திடீரன்று பணிநீக்கம் செய்துள்ளது.
இது குறித்து கடந்த வாரம், ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வமான செய்தித் தொடர்பாளர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஃபிட்மெண்ட் செயல்முறையின் ஒரு பகுதியாக ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் மற்றும் திறமையை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு கடந்த 18 மாதங்களாக வழங்கியிருந்தோம். அதற்கான வாய்ப்பு முடிந்த நிலையில், இதை செயல்படுத்திக் கொள்ளாத ஊழியர்கள் 180 பேரை பணிநீக்கம் செய்துள்ளோம்” என கூறியுள்ளார்.