குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பயணிக்க இருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டது தொடர்பாக ஏர் இந்தியா நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசு முறை பயணமாக ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார். இந்தச் சுற்றுப் பயணத்தில் சுவிட்சர்லாந்து நாட்டுப் பயணத்தை முடித்து ஸ்லோவேனியா செல்ல குடியரசுத் தலைவர் தயாராக இருந்தார். அப்போது அவர் புறப்படவிருந்த போயிங் 747 ரக விமானத்தில் சிறிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மீண்டும் ஓட்டல் அறைக்கு திருப்பினார்.
இதன்பிறகு சுமார் 3 மணி நேர தாமதத்திற்குப் பிறகு குடியரசுத் தலைவர் சுவிட்சர்லாந்திலிருந்து ஸ்லோவேனியாவிற்கு புறப்பட்டார். இந்நிலையில் இந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பாக விசாரணை நடத்த ஏர் இந்தியா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.