சமீபகாலமாக விமானத்தில் பயணம்செய்யும் பயணிகளுக்கு, அவ்விமானச் சேவைகளில் அதிருப்தி நிலவுவதாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக, விமானங்களில் நிலவும் அலட்சியமற்ற சேவைகளால் பயணிகளுக்கு அசெளகரியங்கள் ஏற்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதில் அடிக்கடி ஏர் இந்தியா நிறுவனம் சிக்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ’ஏர் இந்தியா’ விமானம் ஒன்று, நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது மேற்கூரையில் இருந்து நீர் சொட்டுச்சொட்டாக அமர்ந்திருந்த பயணிகள் மீது விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அடுத்து, கடந்த ஜனவரி 17-ஆம் தேதியன்று, பனிமூட்டத்தில் விமானங்களுக்குப் போதுமான ஏற்பாடுகளைச் செய்யாததற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர இண்டிகோ நிறுவன விமானப் பயணிகள் ஓடுபாதையில் அமர்ந்து உணவு உண்ணும் வீடியோ வைரலானதை அடுத்து அந்த நிறுவனத்துக்கு ரூ.1.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் தற்போது, வயதான தம்பதியரின் டிக்கெட்டை மாற்றிய ’ஏர் இந்தியா’ நிறுவனம், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.48 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சண்டிகரைச் சேர்ந்த வயதான தம்பதிகளான சுனில் பார்ட்டி - அவரது மனைவி கூசும் ஆகியோர், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி டெல்லி -வான்கூவர் விமானத்தில் டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளனர். அதன்பின் இரண்டு இருக்கைகளை (41C மற்றும் 41A) கூடுதல் லெக்ரூமுடன் புக் செய்துள்ளனர். இதற்காக கூடுதலாக சுமார் ரூ.18,000 செலுத்தி சீட்டை தேர்வுசெய்துள்ளனர். அவர்கள் புறப்படுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன் இந்தக் கூடுதல் கட்டணம் செலுத்தப்பட்டு உள்ளது. ஆனால், ஜூன் 22 அன்று, டெல்லியில் அவர்கள் ஏறியபோது, அந்த இரண்டு பயணிகளுக்கும் தங்களின் போர்டிங் பாஸ்கள் வெவ்வேறு இருக்கைகளுடன் (32E மற்றும் 32D) வழங்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அந்தத் தம்பதியினர் விமானப் பணியாளர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் சரியாகப் பதிலளிக்கவில்லை எனவும், அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. விமானப் பணியாளர்கள் அந்தத் தம்பதியினரிடம், ’இப்போது ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் உட்காருங்கள் அல்லது போர்டிங்கைவிட்டு வெளியேறுங்கள்’ எனக் கூறியதாகத் தெரிகிறது. அதற்குக் காரணம், வயதான தம்பதியினர் புக் செய்திருந்த அந்த இருக்கைகளை, விமான நிறுவனம் சில விஐபிகளுக்கு ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது. கூடுதல் கட்டணமும் பெற்றுக்கொண்டு, சீட்டையும் ஒதுக்காததால் மிகவும் வருத்தமுற்ற அந்தத் தம்பதியினர், சண்டிகரில் உள்ள நிரந்தர லோக் அதாலத் (பொதுப் பயன்பாட்டுச் சேவைகள்) மையத்தில் வழக்கு தொடுத்தனர்.
இதற்கு ’ஏர் இந்தியா’ நிறுவனம் சார்பில், ‘வயதானவர்கள் என்பதால், அவர்களுடைய உடல்நலத்தில் அக்கறை கொண்டு, எமர்ஜென்சி கதவிற்கு அருகே சீட் மறுக்கப்பட்டது. மற்றபடி இதற்கு வேறு காரணம் இல்லை. தம்பதியினர் மூத்த குடிமக்கள் என்பதால், சிவில் ஏவியேஷன் டைரக்டர் ஜெனரலின் வெளியேறும் வரிசை இருக்கை வழிகாட்டுதல்களின்படி, அவர்கள் அவசரகால வெளியேறும் இருக்கைகளில் அமர தகுதிபெறவில்லை. அதன் அடிப்படையிலே சீட் ஒதுக்கப்பட்டது’ என வாதம் வைத்திருந்தது.
இதை ஏற்றுக்கொள்ளாத நிரந்தர லோக் அதாலத் மையம், ‘குறிப்பிட்ட இருக்கைகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முன்பு, பயணிகளின் உடற்தகுதியைக் கருத்தில்கொள்ள வேண்டியது விமான நிறுவனத்தின் பொறுப்பாகும். அத்துடன், அந்தத் தம்பதியினரின் அசெளகர்யத்தையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது. ஆக, இந்த விசயத்தில் அந்த தம்பதியினருக்கு அசெளகர்யத்தைத் தந்த காரணத்தால் விமான நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும். அதன்படி அந்த தம்பதிகளுக்கு ரூ.18 ஆயிரம் கட்டணம் + இழப்பீடு ரூ.30 ஆயிரம் என மொத்தமாக ரூ.48,000 செலுத்துமாறு ஏர் இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதையும் படிக்க: தேர்தல் பத்திர விற்பனை: அதிக நிதியைத் தட்டித் தூக்கிய பாஜக! 9.5% பெற்ற காங்கிரஸ்!