இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதிய தம்பதியொருவர், கடந்த பிப்.12ஆம் தேதி நியூயார்க்கிலிருந்து AI-116 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பை வந்தடைந்தனர். அப்போது, விமான நிலையத்தின் immigration பகுதிவரை செல்வதற்கு இவர்கள் இருவருக்கும் 2 சக்கரநாற்காலிகள் தேவைப்பட்டுள்ளன. ஆனால் ஒரு நாற்காலி மட்டுமே இருந்துள்ளது. இருவருக்குமே சக்கர நாற்காலி தேவையென அவர்கள் முன்பதிவு செய்திருந்தபோதும், ஒன்றுமட்டுமே கிடைத்துள்ளது.
இதனால் சுமார் 80 வயது மதிக்கத்தக்க அந்த முதியவர், கிடைத்த அந்த ஒரு சக்கர நாற்காலியில் தனது 76 வயது மனைவியை அமரவைத்துவிட்டு, அவருடன் சேர்ந்து விமான நுழைவு வாயில் வரை சுமார் 1.5 கிமீ தூரத்துக்கு நடந்தே சென்றுள்ளார். இறுதியில் நுழைவு வாயிலில் திடீரென மயங்கி விழுந்துள்ளார் அவர். உடனடியாக அங்கிருந்தோர் விமான நிலைய மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று சோதனை செய்துள்ளனர். சோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்தது.
இந்த நிலையில் விதிமுறைகளைக் கடைபிடிக்கத் தவறியதற்காக, விமானப் போக்குவரத்து இயக்குநரகம், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில் சம்பவம் குறித்து 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு ஏர் இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
ஏர் இந்தியாவின் விளக்கம் ஏற்கும்படியாக இல்லை எனக் கூறிய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விமானப் போக்குவரத்து நிறுனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
விமான விதிகள், 1937இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறியதால், விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக அது தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளது. முன்னதாக, கூடுதலாக அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமானம் ஏறும் மற்றும் இறங்கும்போது உதவி தேவைப்படும் பயணிகளுக்கு போதுமான சக்கர நாற்காலிகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தி இருந்தது.
சமீபகாலமாக ஏர் இந்தியா விமானத்தில் பயணம்செய்யும் பயணிகளுக்கு, அவ்விமானச் சேவைகளில் அதிருப்தி நிலவுவதாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அதற்குத் தகுந்தாற்போல் வீடியோக்களும் வைரலாவதைத் தொடர்ந்து, அதுகுறித்து விசாரணை நடத்தி விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.