சமீபகாலமாக விமானத்தில் பயணம்செய்யும் பயணிகளுக்கு, அவ்விமானச் சேவைகளில் அதிருப்தி நிலவுவதாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக, விமானங்களில் நிலவும் அலட்சியமான சேவைகளால் பயணிகளுக்கு அசெளகரியங்கள் ஏற்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதில் அடிக்கடி ஏர் இந்தியா நிறுவனம் சிக்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த மார்ச் 5ஆம் தேதி, டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில், பிசினஸ் வகுப்பில் பயணிப்பதற்காக பெண் பயணி ஒருவர் டிக்கெட் எடுத்துள்ளார். அவர் ஒரு தொழில் நிறுவனத்தின் மூத்த அதிகாரி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விமான ஊழியர்களுக்கும் அந்தப் பெண் பயணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தப் பெண் பயணி விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளார். இதனால் சுமார் 1 மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு விமானம் புறப்பட்டுச் சென்றது.
இதுகுறித்து ஏர் இந்தியா, பிசினஸ் வகுப்பில் பயணம் செய்ய இருந்த பெண் பயணி ஒருவர், ஊழியர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதாகவும், பின்னர் அவரிடம் இருந்து எழுத்துப்பூர்வ உத்தரவாதம் பெற்றுக்கொண்டு மற்றொரு விமானத்தில் அவரை அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி, சமீபகாலமாக ஏர் இந்தியா விமான நிறுவனம், பயணிகளிடமிருந்து பல பிரச்சினைகளைச் சம்பாதித்து வருகிறது. அந்த விமான நிறுவனம், கடந்த ஜனவரி மாதத்தில் இப்படி 894 பயணிகளிகளுக்கு விமானத்தில் ஏற அனுமதி மறுத்திருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம்(டி.ஜி.சி.ஏ) வெளியிட்டுள்ள தகவலில், ’கடந்த ஜனவரி மாதத்தில் 894 பயணிகளுக்கு ஏர் இந்தியா விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 98 லட்சம் ரூபாய் நிவாரணம்/இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது’ எனவும் அது தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜனவரி 17-ஆம் தேதியன்று, பனிமூட்டத்தில் விமானங்களுக்குப் போதுமான ஏற்பாடுகளைச் செய்யாததற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்து, வயதான தம்பதியரின் டிக்கெட்டை மாற்றிய ’ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.48 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து, சமீபத்தில் வீல்சேர் இல்லாததால் முதியவர் உயிரிழந்த விவகாரத்திலும் ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.