ஏர் இந்தியா மற்றும் CFM International ஆகியவை தங்களது எதிர்கால வளர்ச்சிக்காக புதிய 400 குறுகிய விமானங்களுக்கு தேவையான LEAP இன்ஜின்களுக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இந்த இன்ஜின்களின் சக்தி 210 ஏர்பஸ் A320/A321 நியோ மற்றும் 190 போயிங் 737 மேக்ஸ் ஆகிய விமானங்களை இயக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதமே அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. "இரு நிறுவனங்களும் பல ஆண்டு சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது விமானத்தின் முழு LEAP இன்ஜின்களையும் உள்ளடக்கும்" என்று CFM International தெரிவித்துள்ளது.
CFM56-5B இன்ஜின்களால் இயக்கப்படும் A320 நியோ விமானத்தை இயக்கத் தொடங்கிய 2002ஆம் ஆண்டு முதலேவும், ஏர் இந்தியா CFM வாடிக்கையாளராக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்டி கேம்ப்பெல் வில்சன் கூறுகையில், "எங்கள் எதிர்கால வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பெரிய ஒப்பந்தத்தை CFM உடன் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று கூறியுள்ளார். CFM International-ன் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கேல், “இந்த உத்தரவு இந்தியாவில் அதன் இருப்பை வலுப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஏர் இந்தியா 70 அகலமான விமானங்கள் உட்பட 470 விமானங்களுக்கு ஆர்டர் செய்தது. CFM International என்பது GE ஏரோஸ்பேஸ் மற்றும் சஃப்ரான் ஏர்கிராப்ட் இன்ஜின்களுக்கு இடையேயான சமமான கூட்டு முயற்சியாகும்.
- ஜோஷ்வா