புறப்பட இருந்த விமானத்தில் இருந்து தவறி கீழே விழுந்த விமானப்பணிப்பெண் படுகாயமடைந்தார்.
மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து, ஏஐ- 864 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு தினமும் காலை 7 மணிக்குச் செல்வது வழக்கம். இன்று காலையும் அந்த விமானம் வழக்கம் போல மும்பையில் இருந்து புறப்படத் தயாரானது.
ஹர்ஷா லோபா (வயது 53) என்ற விமானப் பணிப்பெண், விமானத்தின் கதவை மூட முயன்றார். அப்போது எதிர்பாராத வித மாக திடீரென்று விமானத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அங்கிருந்த விமான நிலைய பணியாளர்கள் ஓடிவந்து அவரை தூக்கி, உடனடியாக மும்பை நானாவதி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஏர் இந்தியா உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அந்த விமானம் 90 நிமிடம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது.