வெள்ளத்தில் மிதக்கும் மத்தியப்பிரதேசம் : 8 பேர் உயிரிழப்பு

வெள்ளத்தில் மிதக்கும் மத்தியப்பிரதேசம் : 8 பேர் உயிரிழப்பு
வெள்ளத்தில் மிதக்கும் மத்தியப்பிரதேசம் : 8 பேர் உயிரிழப்பு
Published on

மத்திய பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்தள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், 1200 பேரை பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் துரிதப்பட்டுள்ளன.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 454 கிராமங்களில் சுமார் 7 ஆயிரம் பேர் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்தது உள்பட மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. 40 கிராமங்களில் வெள்ளத்தில் சிக்கியிருக்கும் 1,200 பேரை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, வெள்ளப் பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை 9,300 பேர் 170 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், வெள்ள நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் தகவல் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார். போர்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ராணுவத்தின் உதவியை நாடியிருப்பதாகவும் சவுஹான் தெரிவித்தார். தாழ்வான பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்க மூன்று ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்பதால், தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல், குஜராத், ஒடிஷா போன்ற மாநிலங்களிலும் கனமழை கொட்டி வருவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து அம்மாநிலங்களிலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com