அயோத்தி வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் பாதுகாப்பு கருதி அயோத்தியில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டுப் பெண்கள் மற்றும் குழந்தைகளை வேறு ஊர்களில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர்.
அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற தீர்ப்பு வெளியாகும் போது அசம்பாவிதங்களை தடுக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய நிலம் இருக்கும் அயோத்தியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அயோத்தியில் வசிப்பவர்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைக்கத் தொடங்கியுள்ளனர். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2010 ஆம் ஆண்டு அலாகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் போதும் இதே நடைமுறையை பின்பற்றியதாகவும், தற்போதும் அதுவே தொடர்கிறது என்றும் அயோத்தி மக்கள் கூறுகின்றனர்.
அதே நேரம் அயோத்தி வழக்கின் தீர்ப்பு விரைவில் வழங்கப்பட இருக்கும் நிலையில் உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்பு அணிவகுப்பில் காவலர்கள் ஈடுபட்டனர். தீர்ப்பு வெளியாகும் போது எந்த வன்முறை சம்பவங்களும் நிகழாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்துகொண்டு அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
அயோத்தியில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்கள், துணை ராணுவப்படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.