இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் 17 1/2 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அக்னிபாத் என்ற புதிய திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் பணியாற்றுவார்கள். அதில் 25 சதவிகித இளைஞர்கள் மட்டும் தான் கூடுதலாக 15 ஆண்டுகளுக்கு பணியில் தொடர்ந்து வேலை செய்வார்கள். மீதமுள்ள 75 சதவிகிதம் இளைஞர்கள் ஓய்வூதியம் இல்லாமல் சம்பளத்துடன் வேலையை விட்டு அனுப்பபடுவார்கள்.
மத்திய அரசின் இத்திட்டத்திற்கு பல்வேறு தரப்புகளாலும் தற்போது வரை எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் என்று போராட்டங்களும் நடத்தப்பட்டன. இத்திட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டிருந்தன.
இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தில் சேர்ந்த ராணுவ வீரர்களில் ஒருவர் சியாச்சினில் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். கவதே அக்ஷய் லக்ஷ்மன் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்தவர். அவர் சியாச்சின் சிகரத்தில் பணியில் இருந்த போதே வீர மரணம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றிய அக்ஷய் லக்ஷ்மன் மரணத்தை குறிப்பிட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்ததாவது, “சியாச்சினில் அக்னிவீரர் கவதே அக்ஷய் லட்சுமணன் வீரமரணம் அடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இளைஞர் ஒருவர் நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்துள்ளார். ஆனால் அவருக்கு பணிக்கொடை இல்லை, அவரது சேவையின் போது வேறு எந்த இராணுவ வசதிகளும் இல்லை, தியாகம் செய்த அவரது குடும்பத்திற்கு ஓய்வூதியம் இல்லை. இந்தியாவின் மாவீரர்களை அவமதிக்கும் திட்டம் தீட்டுகிறது அக்னிவீரர் திட்டம்” என தெரிவித்துள்ளார். தற்போது ராகுல்காந்தியின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தும் பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.